பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வனல்லனோ? ஆகையால் இவனது வினைப்பயனைத் தானே ஏன்று கொள்வன் என்பதாம். “தீது” என்பது, "இழப்பு” என்ற பொருளில் ஆளப்பெற்றது.

இப்பாடல், ஞானிக்கு வினையில்லை; அவனது வினைப்பயனை முதல்வனே ஏன்றுகொள்வன் என்பதனையுணர்த்திற்று என்பது இவ்வுரையாற் புலனாம். இவ்வினைகள் ஓரிரண்டும் அவன் சென்ற இடத்தே சென்று தொடரும் எனவும், “என்றும் தான் தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ மாதொருகூறல்லனோ” எனவும், இருதொடராக இயைத்துப் பொருள்கொள்க. கைவிடுமோ என்புழி ஓகாரம் எதிர்மறையாய்க் கைவிடான் எனப் பொருள் தந்து நின்றது. கைவிடாமைக்கு அவன் அருளாளனாதலே காரணம் என்பார், “மாதொரு கூறல்லனோ” என்றார்.


43. அநாதி சிவனுடைமை யாலெவையும் ஆங்கே
அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ டெவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்.

இஃது இறைவன் மாதொரு பாகனாகத் திகழ்தலால் மன்னுயிர்கள் பெறும் பயனை விரித்தருளிச் செய்கின்றது,

(இ-ள்) உலகுயிர்கள் யாவும் முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளாகிய சிவனுக்கு உடைமையும் அடிமையும் ஆதலால் அநாதியேயுள்ள உயிர்த்தொகுதியை அநாதியே பிணித்துள்ள பாசத் துயர் விட்டுநீங்கும்படி அம்மையப்பனாகக் கூடிநின்று கேவல சகல சுத்தமாகிய எவ்விடத்தும் காத்தருளுதல் அம்முதல்வனது கடமையே யென்று உணர்வாயாக எ-று.

பதி பசு பாசம் என்னும் மூன்றும் அநாதியென்பது, ‘பதியினைப் போற் பசு பாசம் அநாதி’ எனவரும் திருமந்திரத்தாற் புலனாம். முப்பொருளுண்மையாகிய இதனை, அநாதிசிவன், அநாதியெனப் பெற்ற அணு, அநாதியே ஆர்த்த துயர் என்னுந் தொடர்கள் தெளிவுபடுத்தல் காணலாம்.

இதனால் கட்டு நிலையினும் வீட்டு நிலையினும் ஆன்மாவுக்குச் செயலில்லையென்பது புலளும். -

“ஆர்த்த பிறவித்துயர் கெட நாமார்த்தாடுந் தீர்த்தன்” என்பது திருவெம்பாவை.