பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருவெம்பாவை விளக்கம்

திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ளவனே’ என்று மாணிக்கவாசகர் இறைவனை விளித்தற்குக் காரணம் உளது. உத்தரகோச மங்கை என்னும் சிவத்திருத்தலம் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளதாகும். இத்தலமும் மணிவாசகப் பெருமானாரால் இறையருள் விளக்கம் பெற்ற பதியாகும். உத்தர கோச மங்கை என்னும் பதியினைக் குறிப்பிட்ட அடிகளாருக்குத் தம் நெஞ்சில் எப்பொழுதும் நீங்காது குடிகொண்டிருக்கும் பதியாம் திருப்பெருந்துறை நினைவுக்கு வருகிறது. திருப்பெருந் துறையில்தான் மணிவாசகப் பெருமானைச் சிவபெருமான் ஆட்கொண்டார். எனவே அப்பதி அவர் ஊனிலும்

உயிரிலும் கலந்து நிற்கின்றது.

இனிச் சிவானந்தானுபவம் எப்படிப்பட்டது என விளக்கப் புகுகின்றார். அது பழச்சுவையென அமுதென அறிதற்கரிதென எளிதென அமரரும் அறியார்’ என்றார். தேவர்கள் யாவரும் சிவானந்தானுபவம் கனிந்த பழத்தின் சுவை போன்றது என்றும், அமுதம் போன்றது என்றும், அறிதற்கு இயலாதது என்றும் அறிதற்கு எளியது என்றும், அறிய மாட்டார்கள் என்றார். சிவானந்தானுபவம் எவ்வாறு இருந்தது என விளக்கப்பட முடியாததாகும். ஆனால் உவமை வாயிலாக ஒருவாறு உணர்த்தலாம். சிவானந்தானுபவம் பழச்சுவை போல் இருக்கும் எனலாம். அமுதெனத் தித்திக்கும் எனலாம். ஆனால் இவ்வாறு உவமை வழி விளக்க முடியாதவன் இறைவன். இங்குக் காட்டப் பெற்ற பொருள்கள் எல்லாவற்றையும் விட இனியவன், சுவை மிகுந்தவன் என்ற கருத்தில் திருநாவுக் கரசர் பெருமான்,

கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க் குழற்பாவை நல்லாரினும் தனிமுடி கவித்தாளு மரசினும் இனியன்தன் அடைந்தார்க்கு இடை மருதனே

-திருவிடை மருதுரர் : 1.0