பக்கம்:திரு. வி. க.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 157

உள்ளத் தெளிவும் நடையும்

‘உள்ளத்தே ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்று கூறினார் கவியரசர். ஒருவருடைய வாக்கு என்பது யாது? பேசும் அல்லது எழுதும் நடையைத் தானே அவ்வாறு குறிக்கிறோம். எனவே, ஒருவருடைய பேச்சு நடை அல்லது எழுத்து நடை என்பது அவர்களுடைய உள்ளத் தெளிவை வெளியிடும் கண்ணாடியாக அமைகிறது என்று அறிய முடிகிறது. எந்த ஒரு பொருளைப்பற்றியும் தெளிந்த அறிவுடையவன் விளக்கிக் கூறுவது போலக் குழப்பமான அறிவுடையவன் விளக்க முடியாது. எனவே, ஒருவன் ஒரு விஷயம் பற்றி விளக்கிக் கூறும் முறையிலிருந்தே அவனுடைய அறிவு அந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் தெளிவு பெற்றிருக்கிறதா, அன்றிக் குழம்பியிருக்கிறதா என்பதைக் காட்டிவிடும். இந்த அடிப்படையில் திரு.வி.க.வின் எழுத்தைக் கண்டால் அவருடைய அறிவின் தெளிவு எத்தகையது என்பதை அறிய முடியும். அரை நூற்றாண்டுக் காலம் தமிழகம் எங்கும் சுற்றித் திரிந்து எல்லாப் பொருள்கள் பற்றியும் பேசிய அப்பெரியார் சிறியவும் பெரியவுமான நூல்கள் ஏறத்தாழ ஐம்பது எழுதியுள்ளார். இவற்றிலிருந்து அவருடைய நடையை நன்கு அறிய முடியும்.

எழுத்து, பேச்சு நடைகள்

சாதாரணமாக ஒர் அறிஞரைப்பற்றியும் அவருடைய நடையைப்பற்றியும் கூறவேண்டுமாயின், அவருடைய எழுத்து நடை, பேச்சு நடை என்ற இரண்டையும் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய பேச்செல்லாம் எழுத்தாகிவிடாது. காரணம், பேசும் பொழுது இருக்கும் சூழ்நிலை எழுதும்பொழுது அமைவதில்லை. பேசும்பொழுது மிக வேகமாக ஒரு கருத்தைச் சிந்திக்கவும் சொல்லவும் தேவை ஏற்படு கிறது. மேலும், எதிரே இருந்து கேட்பவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/167&oldid=695458" இலிருந்து மீள்விக்கப்பட்டது