பக்கம்:திரு. வி. க.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அ.ச. ஞானசம்பந்தன்

காட்டிய அன்பின் பெருக்கத்தை நேரே கண்டவர் மறக்க ஒண்ணாது. அவர் காலத்தே அவரை வாழ்த்தியவர் பலர் உண்டு; தூற்றியவர்களும் நிரம்ப உண்டு. வாரந்தோறும் அவரை மிகக் கேவலாகத் தாக்கியும் இழித்தும் எழுதிய வர்களும் பேசியவர்களும் உண்டு. அவர்கள் தாக்குதலையும் இழிப்புரையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் எழுப்பிய வினாக்கட்கு மட்டும் விடை எழுதிய பொறுமையாளர் திரு. வி.க. மறுப்பு எழுதும்போதுகூட மறந்தும் ஒரு சொல் கடுமையாக எழுத மாட்டார். கடிந்துரைத்தல் என்பது அவரால் முடியாத ஒரு செயலாகும். தம்மாட்டுப் பகைமை பாராட்டுபவர்களிடமும் அன்பு நிறைந்தவராய் அவர் மாட்டுக் காணப்பெறும் தவறுகளை எடுத்துக்காட்டித் திருத்த முயன்ற பெரியார் அவர். யாராயிருப்பினும் எத்துணைத் தீமை புரியினும் அவர் மாட்டுக்காழ்ப்பும் பகைமையுங் கொள்ளாத ஒரு தமிழர் திரு. வி.க. ஆவார்.

பேச்சும் செயலும்

‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்று மேடை ஏறிப் பேசுவோர் பலரைக் கண்டுள்ளோம். ஆனால் அவ்வாறு உள்ளத்தால் உணர்ந்து பேசுகிறார்களா அவர்கள் என்பது ஆராய்ச்சிக்குரியதே ஆகும். அவ்வாறு கூறுபவர்கள் அதன் படி நடக்க இயலாமைக்கும் ஒரு காரணம் உண்டு. பிறர் தீங்கு செய்த வழி மனத்தில் வெறுப்புக் கொள்பவர் யாவருங் கேளிர் என்று உணர இயலாது. எனவேதான், இப் பாடலைக் கூறிய கணியன் பூங்குன்றன என்ற பெருமகன் அடுத்த அடியில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றுங் கூறிப் போனான். தீங்கு செய்தவர்களைப் பொறுத்துக்கொள் என்று கூறுவதைக் காட்டிலும் ஒரு படி மேலானதாகும் இது. தீங்கைப் பொறுப்பதிலும் ஒரு தொல்லை உண்டு. பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. அந்த அளவை மீறும் பொழுது பொறுமை என்று பேசுவது இயலாத காரியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/28&oldid=695543" இலிருந்து மீள்விக்கப்பட்டது