பக்கம்:திரு. வி. க.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 31

மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும், அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதி, அமைதியேயாகும்.

அமைதி வாழ்வுக்குச் சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்; சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக் கின்றன. அவற்றால் சகோதர நேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே!

தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக் காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றையல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை: அமைதிக் குரிய சகோதர நேயம் பெருகிப் பரவாமையேயாகும்.

அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படு கின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறு பல கட்டுகளும் வகுக்கப்படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலை பெறுத்தவல்லது. -

சகோதர நேயம் என்பது தன்னுயிரைப்போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்ன பிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப் பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/41&oldid=695558" இலிருந்து மீள்விக்கப்பட்டது