பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மு. பரமசிவம் *

விந்தன் விரும்பிப் படித்த தமிழ்க் கவிஞர்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவிஞர் தமிழ் ஒளி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

1954ஆம் ஆண்டில் விந்தன் 'மனிதன்' என்னும் மாத ஏட்டை ஆரம்பித்தார். முதல் இதழில் புத்தர்பிரான் ஆட்டுக்குட்டியை அணைத்தவாறு உள்ள படத்தை வெளியிட்டார். அதற்கு ஏற்ற வண்ணம் கவி மணியின் பாடல் ஒன்றையும் வெளியிட்டார். பாரதி தாசனுக்குப் பொன்னி இதழ் பொன்விழா மலர் வெளி யிட்டபோது, ஒப்பற்ற கவிஞர்; உயிருள்ள கவிஞர் என்று பாராட்டிக் கடிதம் எழுதினார்.

மனிதன் இதழில் பணியாற்றிய கவிஞர் தமிழ் ஒளியைப் பேச்சுக்குப் பேச்சு அவன் ஒரு இலக்கிய மேதை என்று பாராட்டுவார்.

இதன்மூலம் விந்தனின் மனம் கவர்ந்த கவிஞர்கள் யார் என்பதை அடையாளம் காணலாம்.

1960களில் விந்தனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது, தம் கவிதை ஆற்றலை வெளிப்படுத்த.

'தினமணி கதிர் பத்திரிகையில் உதவி ஆசிரியராக விந்தன் பணியாற்றிய காலத்தில் அதன் ஆசிரியர் சாவி, மகாபாரதக் கதையைக் காவியமாக எழுதுமாறு விந்தனைப் பணித்தார். அதிக அளவில் கவிதைகள் எழுதாத விந்தன் மிகவும் துணிச்சலுடன் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, 'பாட்டில் பாரதம் என்னும் தலைப்பில் மரபுக்கவிதை வழியில் காவியத்தை எழுதினார்.