பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

எழுந்தருளுவான், (தெ. இ. க, தொ IV எண் 43} திருக்கண் சாத்தும் திருநாளும், எதிரிலி சோழன் சிவபாத சேகரன் சித்தத்துணைப் பெருமாள் விழாவும் தைப்பூசத்துப் பாவாடையீட்டுப் பெரிய விழாவும் தில்லைப் பெருங் கோயிலில் நிகழ்ந்தனவாகக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன.

திருமூலட்டானப் பெருமானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நாள் தோறும் எட்டுக்காலப் பூசைகள் நடைபெற்றன. (தெ. இ க. தொ. XII எண் 51.) தில்லையில் திருநீற்றுச் சோழர் பஞ்ச மூர்த்திகளுடனும் சமயாசிரியர் நால்வருடனும் திருவீதியில் உலாப் போந்தமை தில்லையுலா வாற்புலனாகும்.

தில்லைப் பெருங்கோயிற் பூசனை மகுடாகம விதிப்படி முற்காலத்தில் நடைபெற்றதென்பது, இரட்டையர் பாடிய தில்லைக் கலம்பகத்தாலும் கி.பி. 1684- 1686 ஆம் ஆண்டுகளில் மராட்டிய மன்னர் சாம்போசி நிகழ்த்திய தில்லைச் சிற்றம்பலவர் கோயிற் கும்பாபிசேகம் உயர் ஆகமப்படி நடைபெற்றதாகச் செப்பேட்டிற் குறிக்கப் பெற்றிருத்தவாலும் அறியப்படும். பதஞ்சலி முனிவர் செய்த நூலின் விதிப்படி தில்லைக் கோயிலில் நாட் பூசனையும் திருவிழாவும் நடத்தப் பெற்றன எனக் கோயிற் புராணம் கூறும். பதஞ்சலிமுனிவர் இயற்றியதாகக் கூறப்படும் பதஞ்சலி பூஜா விதிப்படியே தில்லையிற் கூத்தப்பெருமானுக்குப் பூசை நடத்தப் பெறுகின்றது. சிவாகம நெறியினைக் கடைப்பிடித் தொழுகிய வியாக்கிரபாதரைச் சைவமுனி எனவும் வைதிக நெறியினைப் பின்பற்றியொழுகிய பதஞ்சலி முனிவரை வைதிக முனி எனவும் கூறுவதுண்டு. அம்முறைப்படி தில்லைக் கூத்தப்பெருமானுக்கு நிகழ்த்தப் பெற்றுவரும் பூசனையானது ஆகம நெறிக்கும் வேதநெறிக்கும் ஒத்தபொதுநெறியில் நடைபெற்று வருகின்றது எனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.