பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

கோயிலிற் சிவத்திருப்பணிகள் புரிந்து தில்லையம்பலவாணர் எடுத்த பொற்பாதத்தின் கீழ் என்றும் பிரியாதமார்ந் தின்புறும் தெய்வநிலை கைவரப் பெற்ற இச் சோழர் பெருமானை உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய கோயிற்புராணத்தில்,

“ஒன்றிய சீர் இரவிகுலம் உவந்தருளி யுலகுய்யத்
துன்று புகழ்த் திருநீற்றுச் சோழனென முடி சூடி
மன்றினடந் தொழுதெல்லை வளர்கனக மயமாக்கி
வென்றிபுனை யநபாயன் விளங்கிய பூங்கழல் போற்றி"

(கோயில்- பாயிரம்-12)

எளவரும் பாடலால் வணங்கிப் போற்றியுள்ளார். தில்லைப் பெருமான் திருவீதிக்கு எழுந்தருளும் போது விநாயகர், முருகன் சமயாசாரியர் முதலியோர் திருவுருவங்களோடு திருநீற்றுச் சோழனாகிய இவ்வேந்தர் பெருமான் திருவுருவமும் எழுந்தருளச் செய்யப் பெற்றது என்ற செய்தி தில்லையுலாவில் இடம் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

“தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குஞ் சிந்தை யப்யன்" எனக் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலும்,

ஏத்தற் கருங்கடவுள் எல்லையி லானந்தக்
கூத்தைக் களிகூரக் கும்பிட்டு”

எனக் குலோத்துங்க சோழனுலாவீலும் கவிச்சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தர் தில்லையம்பதியில் அநபாயனாகிய இவ்வேந்தனுக்குள்ள ஈடுபாட்டினைப்புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுலதாகும். இவன் மைந்தன் இரண்டாம் இராசராச சோழனது 17-ஆம் ஆட்சியாண்டில் திருமழபாடிக் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்றில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ......... குன்றத்தூர்ச் சேக்கிழான்மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் என்பார் திருமழபாடித் திருக் கோயிலுக்குத் தொண்ணூறு பேராடுகள் உதவிய செய்திகுறிக்கப்பட்டுள்ளது.