பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பல நாதனையும் சேவித்து, வடக்குக் கோபுரம் கட்டி வித்தசேவை" (௸ எண் 623)

எனவும் வரும் கல்வெட்டுக்கள் சுந்தரபாண்டியன் கட்டியது மேலைக்கோபுரம் என்பதனையும் வடக்குக் கோபுரம் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பெற்றதென்பதனையும் குறித்துள்ளமை காணலாம்.

"இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத்திருமாளிகையில் நிலையெழுகோபரத் திருவாசல் புறவாசல் தென் பக்கத்து எழுந்தருளியிருந்து பூசைகொண்டருளுகிற குலோத்துங்கசோழ விநாயகர்" எனப்பாண்டியர் கல்வெட்டிற் குறிக்கப்பட்ட தல விநாயகர் மேலைக்கோபுரத்துடன் இணைந்துள்ள திருமேனியாதலால் அப்பெருமான் எழுந்தருளியுள்ள மேலைக்கோபுரம் குலோத்துங்க சோழனால் முதன் முதற் கட்டப்பெற்றதென்பது உயத்துணரப்படும்.

கி.பி.1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்தசோழ மன்னன் மூன்றாங்குலோத்துங்கன் ஆவன். இவன் தில்லையில் சிற்றம்பலத்திற்கு முன்னுள்ளதும் இப்பொழுது கனகசபையென வழங்கப் பெறுவதும் ஆகிய எதிரம்பலத்னதப் பொன்னினால் வேய்ந்தான். கூத்தப்பெருமானுக்குச் சித்திரைத்திங்களில் திருவிழா நிகழ ஏற்பாடு செய்தான். சிவகாமியம்மை திருக்கோயிலின் விமானமாகிய கோபுரத்தைப் பொன்னால் வேய்ந்தான். இவன் தில்லையிற்செய்த இத்திருப்பணிகள் "எத்தரையும் தொழும் இறைவற்கு எதிரம்பலம் செம்பொன் வேய்ந்து, சித்திரை விழா அமைத்து இறைவிதிருக்கோபுரம் செம்பொன் வேய்ந்து" எனவரும் இவனுடைய மெய்க்கீர்த்தியிற் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். இங்கு எதிரம்பலம் என்றது சேக்கிழார் கூறும் பேரம்பலமே எனவும், எதிரம்பலம் பொன் வேய்ந்த மூன்றாங்குலோத்துங்கனே திருத்தொண்டர் புராணம் கூறும் பேரம்பலம் பொன் வேய்ந்த அநபாயன் எனவும், சேக்கிழாரை ஆதரித்துத் திருத் தொண்டர் புராணம் பாடு வித்தவன் இம்மூன்றாங் குலோத்துங்கனே எனவும் கூறுவர் ஆராய்ச்சியறிஞர் சதாசிவபண்டாரத்தார்.