பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தொண்டைநாட்டில் முப்பத்திரண்டும், துளுநாட்டில் ஒன்றும், வட நாட்டில் ஐந்தும் ஆக இருநூற்றெழுபத்திரண்டு தலங்கள் அமைந்துள்ளன. இங்குக் குறிக்கப்பெற்ற சிவத்தலங்கள் யாவும் உலகமக்கள் எல்லோரையும் தன்பால் ஈர்த்து உய்யும் நெறி காட்டியருளும் தெய்வத் திருத்தலங்களாகும். இத்தலங்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது, பெரும் பற்றப்புலியூராகிய தில்லைப்பதியேயாகும். இதுபற்றியே "பெருமை நன்றுடைய தில்லை" {4-57-4) எனத் திருதாவுக்கரசுப் பெருமான் இத்திருத்தலத்தைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.

தில்லைத்தலமானது சோழநாட்டில் கொள்ளிடத்திற்கு வடக்கும், வடவெள்ளாற்றுக்குத் தெற்கும் ஆக அமைந்த இடப்பரப்பில் வங்கக்கடலுக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் அமைந்துள்ளது. சிதம்பரம் என வழங்கப்பெறும் இத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சிதம்பரம் வட்டத்தின் தலைமை ஊராகும். பிற்காலச் சோழராட்சியில் இவ்வூர் ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. தில்லைநகராகிய இது குடிமக்களுக்குரிய ஊராகவோ அரசர்க்குரிய தலைமை நகராகவோ அரசர்களால் விடப்பட்ட பிரமதேயமாகவோ ஆகாமல் திருச்சிற்றம்பலமுடைய பெருமானாகிய, இறைவனுக்கேயுரிய தலைமையுடைய தெய்வத்தலமாகத் திகழ்தலின் தனியூர் பெரும் பற்றப்புலியூர் எனப் பெயர் பெறுவதாயிற்று எனக்கருத வேண்டியுள்ளது. பெரும்பற்றப்புலியூராகிய இத் தில்லை நகரையடுத்துக் குடிமக்கள் வாழும் எல்லைப்பிடாகைகளாகிய சிற்றூர்கள் சுற்றியமைத்துள்ளன.

இத்தலம் கிழக்கே திருவேட்களத்தையும், தெற்கே பழங் கொள்ளிடப் பேராற்றையும், மேற்கே. கண்ணங்குடியையும் வடக்கே மணலூரையும் தனக்கு எல்லைகளாகக் கொண்டுள்ளது. இங்குக்குறித்த எல்லைக்குள் ஒன்பது பிடாகைகள் (சிற்றூர்கள்) அமைந்துள்ளன. கிழக்கே சிதம்பரம் புகைவண்டி நிலையத்திற்கும் இவ்வூருக்கும் இடையே பாலமான் என்னும் சிற்றாறு இந்நகரத்தையொட்டி ஓடுகின்றது. இதனைக் கடந்தே நகருக்குள் நுழைதல் வேண்டும். இச்சிற்றாறு வீரநாராயணன்