பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

யடுத்துள்ள இராசராசேச்சுரத் திருக்கோயிலிலுள்ள தில்லை வாழந்தணர்களைக் குறித்த திருத்தொண்டத் தொகையடியார் சிற்பத்தினாலும் இனிது புலனாகும். தில்லையம்பலப் பெருமானைத் தமது வாழ்வாகவும் வைப்பு நிதியாகவும் கொண்டு வழிபாடு செய்து வரும் நான்மறை யந்தணர்களாகிய இத்தில்லைவாழ் அந்தனர்களை 'ஊறுஇன் தமிழால் உயர்ந்தார்' எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிறப்பித்துப் போற்றியுள்ளார். பின்ளையார் அருளிய வண்ணம் தமிழால் உயர்ந்த தில்லைவாழந்தணர்கள் தில்லைக் கனகசபையிவே செந்தமிழ்ச் சைவத் திருமுறைகளைப் பண்ணுடன் ஓதிப் போற்றி வருவது தமிழ் மக்கள் எல்லோரும் பாராட்டுதற்குரிய திருப்பணியாகும்.

"அகலிடத் துயர்த்த தில்லை யந்தணர் அகிலமெல்லாம்
புகழ்திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றிவாழ்க"

எனச் சேக்கிழார் பெருமான் வாழ்த்திய அருண்மொழி வாழ்த்து தில்லைவாழந்தணர்க்கு என்றும் உரியதாகும்.