பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

தசமிதிதியும். அத்த நட்சத்திரமும் கும்பலக்கினமும் பெற்ற நல்லநாளில் தில்லையம்பலவாணர் திருநடம்பரியும் சிற்சபையினைச் செப்புத்தகடு வேய்ந்து தில்லையில் வாழும் அழகிய திருச்சிற்றம்பலத் தவமுனி என்பார் உலகம் போற்றக் குட நீராட்டு விழாவை நிகழ்த்தினார் என்ற செய்தியை மேற்குறித்த தமிழ்ப்பாடல் நன்கு விரித்துரைத்தல் காணலாம்.

"கேரள தேசத்தின் மலைகளுக்கருகில் உள்ளவரும் மரத்தின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆள்பவரும், அருந்தும் தீருக்கு அருகில் உளளவரும், அம்பலத்திற்கு இலக்கணமாக விளங்குபவரும் ஆன சிவனுக்குக் கேரள தேசத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு” என்ற செய்தி, இச்செப்பேட்டின் வடமொழிப்பகுதியிற் கூறப்பட்டுள்ளது. இதனைக் கூர்ந்து சிந்திக்குங்கால் தில்லைக் கூத்தப்பெருமான் கேரள நாட்டின் மலைகளுக்கருகில் மர நிழலில் ஒரு காலத்தில் மறைக்கப் பட்டிருந்த செய்தி நன்கு புலனாகும். அன்றியும் கி.பி 1684-இல் தில்லையில் வாழும் அழகிய திருச்சிற்றம்பல முனிவர் முயற்சியால் கி.பி. 1684-இல் நிகழ்த்த குடமுழுக்கு உயர் ஆகமப்படி நிகழ்த்தப் பெற்றது எனக் குறிப்பிடுதலால் அவர் காலத்துத் தில்லைப் பெருங்கோயிற்பூசை, மகுடாகமவிதிப்படி நடைபெற்றதென்பதும், "சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை' என்றதனால் முன்னர்ச்சிற்சபைக்கு வேய்ப்பெற்றிருந்த பொன்னோடு பிறமதத்தவரால் கொள்ளை கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும்.

45 ஆம் எண்ணுள்ள செப்பேடு, ஸ்ரீமத் சர்வதாரியாண்டு மார்கழிமாதம் தன்னிடத்தை (சிதம்பரத்தை) விட்டு வெளியே சென்றவருக்குச் சாம்போசி என்னும் அரசனுடைய ஆணையால் கோபால தாதாசி என்பவரால் திருப்பணி செய்யப்பெற்று இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் ஆடவல்லான் மீண்டும் தன் அம்பலத்தை அணிசெய்தார். விபவ ஆண்டு தைமாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை பௌர்ணமியன்று கனகசபை முற்றலும் பொன்னால் வேயப்பெற்று இறைவனுக்குக் குடமுழுக்கு நடத்தப்பெற்ற செய்தியைக் கூறுகின்றது. இச்செப்பேட்டினிறுதியில்,