பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அறத்தின் வாழும் இவர், வையமம் (பிழை. வையகம்) போற்றும் மனையறத்தினை மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் திருவோடு அளித்து வந்தார். இளைமீதுார (பிழை. இளைமைமீதூர) இன்பத்துறையில் எளியராகிய இவர் ஒரு பரத்தைபால் அணைந்து வந்தார். அப்பொழுது இவருடைய மனைவியார் ‘எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்’ என இறைவனது திருநீலகண்டத்தின்மேல் ஆணையிட்டுக் கூறினார். அது கேட்ட திருநீலகண்டர் எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்றன் மனத்தினும் தீண்டேன் என உறுதி கூறி அவ்வாணை மொழியினை வழுவாது பாதுகாத்து வாழ்ந்தார். திருநீலகண்டக்குயவரும் அவர் தம் மனைவியாரும் ஐம்புலன்களை வென்ற உளத்திட்பமுடையவர்களாய் மனையறம் ஓம்பி முதுமைப் பருவம் அடைந்தனர். அந்நிலையில் அவர்தம் நெஞ்சத்திட்பத்தினை உலகத்தார்க்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான் சிவயோகியாராக அவர்களது இல்லத்திற்கு வந்து ஓடொன்றினைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி திருநீலகண்டரிடம் கொடுத்துச் சென்றார். சென்றவர் அவ்வோட்டினை மறையும்படி செய்துவிட்டுச் சில நாள் கழித்துத் திருநீலகண்டரை அடைந்து தாம் கொடுத்த பிச்சைப் பாத்திரமாகிய ஓட்டினைத்தரும் படி வேண்டினார். திருநீலகண்டர் அவ்வோட்டினை வீடுமுழுதும் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காத நிலையில் பெரிதும் வருத்தமுற்றார். வேறொரு புதுவோடு தருவதாகக் கூறினார். அதுகேட்ட சிவ யோகியார் அவ்வோடு காணவில்லையாயின் 'அதனையான் எடுத்திலேன்' என்று உன் பிள்ளையைக் கைப்பற்றிச் சத்தியம் செய்க என்றார். திருநீலகண்டர் தனக்கு மைந்தன் இல்லையெனக் கூறினார். மனைவி கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்’ என்றார் சிவயோகியார். 'எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை’ என்றார் திருநீல கண்டர். இவ்வழக்கு தில்லைவாழந்தணர் கூடியிருந்த சபைக்கு எடுத்துக் கூறப்பெற்றது. இவ்வழக்கினை விசாரித்த தில்லைவாழந்தணர்கள் திருநீலகண்டக் குயவரை நோக்கி, நீர் சிவ யோகியார் சொன்னபடி நும்மனைவியின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கி உறுதி கூறுதலே முறை எனத் தீர்ப்பளித்தனர். திருநீலகண்டரும் 'பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்' என்று சொல்லிச் சிவயோகியாருடன் தம் இல்லத்தை