பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

கிறார். ஊரில் பொது ஜனங்களுடைய சொத்தை இப்படிப் பட்ட திருடர்கள் கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்கு அவர் யாதொரு ஏற்பாடும் செய்யவில்லை! ஆகா! என்ன அக்கிரமம் இது! இனி நான் என்ன செய்கிறது! வழியில் கிடந்து அகப்பட்ட ரூபாயை நான் வட்டியும் முதலுமாக அதன் சொந்தக்காரரிடம் சேர்க்க வேண்டு மென்று நினைத்த நினைவும் பலியாமல் போய் விட்டதே! அதுவுமன்றி, என் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்கு நான் கடைசியான ஜீவாதாரமாக எண்ணிய இந்த முயற்சியும் இப்படிப் பலிதமடையாமல் போய்விட்டதே! இனி நான் என்ன செய்வேன்! எப்படி நான் வீட்டிற்குப் போய் என் குழந்தைகளின் முகத்தில் விழிப்பேன்! இன்றைக்காவது தாங்கள் சாதத்தைக் காணலாமென்று என் குழந்தைகள் ஆவலோடு வழி பார்த்திருப்பார்களே! நான் வெறுங்கையோடு போனால், அவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்து ஏங்கி அப்படியே விழுந்து விடுவார்கள்! ஐயோ! தெய்வமே இன்னம் எவ்வளவு காலந்தான் நீ என்னையும் என் குடும்பத்தாரையும் சோதனை செய்ய எண்ணுகிறாயோ தெரியவில்லையே!” என்று பலவாறு பிரலாபித்துத் தனக்குத் தானே சிந்தனை செய்தவனாய்த் தான் உடனே அந்த ஊர்த் திவானிடம் சென்று அன்று நடந்த கொள்ளையைப் பற்றிப்பிராது செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்ட வனாய்க் கடைத் தெருவை விட்டு திவானுடைய ஜாகையின் வாசலுக்குப் போய்ச் சேர்ந்து அங்கிருந்த ஒரு சேவகனைக் கண்டு அவனிடம் தனது வரலாற்றை யும், தனது குடும் பத்தின் இப்போதைய நிலைமையையும், தனது மிட்டாயியும் காசும் கொள்ளையிடப்பட்ட விவரத்தையும் கூறி, விஷயங்களை எல்லாம் திவானிடம் சொல்லும் படி அவனிடம் பணிவாக வேண்டிக்கொள்ள, அதைக் கேட்ட சேவகன் மிகுந்த இரக்கமும் பச்சாதாபமும் தோற்றுவித்தவனாய், உடனே திவானிடம் போய் விட்டுத் திரும்பிவந்து 'அப்பா! நீ சொன்ன சங்கதிகளை எல்லாம் நான் திவானிடம் சொன்னேன். அவர் எல்லா விஷயங்களையும் சட்டப்படியே நடத்துகிற மகா கண்டிப்பான மனிதர், இது கச்சேரி செய்யும் நேரமல்லவாம். நீ எழுத்து மூலமாக உன் பிராதை எழுதி எடுத்துக்கொண்டு வந்து, நாளைய தினம் காலை

30