பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்யமுள்ள மனிதரும் இருக்கிறார்களா! இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! ஆனாலும் ஒரு விஷயம். நான் அன்னியருடைய பொருளின்மேல் ஆசை வைப்பதே கூடாது என்ற விரதத்தை உறுதியாக அநுஷ்டிப்பவன்; என்னுடைய சொந்த உழைப்பினால் எனக்குக் கிடைக்கும் பொருளே என்னுடைய பொருளன்றி மற்றது என்னுடைய பொருள் ஆகாது. அதைக்கொண்டு நான் என்னுடைய உடம்பை வளர்ப்பது நியாயமல்ல. ஆகையால், உங்கள் பொருள் உங்களுக்கே இருக்கட்டும்' என்றான்.

அதைக் கேட்ட சேவகன் மன இளக்க மடைந்து ஆநந்தக் கண்ணிர் விடுத்து, "ஆகா! பெண்டுபிள்ளைகள் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் மகா விபரீதமான நிலைமையில் இந்த உலகத்தில் வேறே யாராவது இப்படி நடந்துகொள்வார்களா இது மகா அதிசயமான காரியமாக இருக்கிறது! இருக்கட்டும், நீர் இதை இனாமாக வாங்கிக்கொள்ள வேண்டாம்; இதை ஒரு கடனாக வைத்துக் கொள்ளும். நீர் மறுபடியும் பணம் சம்பாதிக்கும்போது எனக்கு இந்த எட்டனாவைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்; வாங்கிக்கொள்ள மறுக்காதீர்" என்றான்.

சமயற்காரன், "ஐயா! உங்களுக்கு அநேககோடி வந்தனங்கள். உங்கள் தயாள புத்திக்கு உங்களையும் உங்களுடைய பிள்ளை குட்டிகளையும் கடவுள் எப்பொழுதும் மங்களகரமாக வைக்கட்டும். நான் இப்போது வேலை செய்ய வகையற்றுத் திண்டாடுகிறேன். நான் இனி நியாயமான வழியில் சம்பாத்தியம் செய்ய எனக்கு ஏதாவது ஒரு துறை ஏற்படுமென்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எனக்கு மறுபடி பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தால், நான் அதை வைத்துக்கொண்டு கடன் வாங்கலாம். ஆகையால், எவ்வித நம்பிக்கையுமற்று இறக்கும் தருணத்தில் இருக்கும் நான் உங்களிடம் கடன் வாங்குவது நியாயமாகாது. ஆகையால், எனக்கு உங்களுடைய பணமே வேண்டாம். நாளைய தினம் பகல் வரையில் எங்களுடைய உயிர் இருந்தால், நான் மறுபடி இந்த திவானிடம் வந்து எழுத்து மூலமாகப் பிராது கொடுத்துப் பார்க்கிறேன். இவரிடம் நியாயம் கிடைக்குமானால், என்னிடத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட மூன்று ரூபாய் எனக்கு வரும். அதைக்

32