பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங்கினான். அவன் திவானினது வண்டிக்காரனுக்கு அடிக்கடி கள் குடிக்கக் காசு கொடுத்து, அவனுடைய அந்தரங்கமான பிரியத்தை சம்பாதித்துக் கொண்டமையால், அவன் திவானுடைய வண்டியை ஏதோ ஒரு முகாந்திரத்தைச் சொல்லி, புதிய புதிய வீதிகளின் வழியாகவும் கடைத் தெருவின் வழியாகவும் ஒட்டிக் கொண்டு செல்லத் தொடங்கினான். நமது சமயற்காரன் தினம் தினம் புதிய புதிய மனிதரைக் கண்டுபிடித்து எராளமான தொகையை வசூலிக்கத் தொடங்கினான். அவ்வாறு பணத்தொகைகள் எளிதில் சேரச்சேர, அவனுடைய மூளை அபாரமான யூகங்களையும் தந்திரங்களையும் செய்யத் தொடங்கியது. அவனுக்குப் புதிய புதிய யோசனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவன் அந்த ஊர் அரண்மனைக்குள் சேவகர்களோடு சேவகனாய் நுழைந்து பழைய இரும்பு சாமான்கள் கிடந்த ஓர் அறைக்குள் புகுந்து தேடிப் பார்த்து, துருப்பிடித்த பழைய காலத்து இரும்பு முத்திரை ஒன்று கிடந்ததைக் கண்டு, அதை எடுத்துக்கொண்டு வந்து அதற்கு எண்ணெய் போட்டுத் தேய்த்துப் பார்க்க, அதில் திவான் லொட படசிங் பகதூர் என்ற எழுத்துகள் காணப்பட்டன. அது அந்த சமஸ்தானத்தில் அதற்கு முன்னிருந்த ஒரு திவானினது முத்திரை என்று உணர்ந்து, அதைப் பளிச்சென்று சுத்திசெய்து அதற்கு ஒரு மரப்பிடி போட்டு எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அவனுக்கு இன்னொரு யோசனை தோன்றியது. தான் நேரில் ஒவ்வொரு மனிதரிடமும் போய்ப் பணம் வசூலிப்பது அபாயகரமான காரியமாதலால், அப்படிச் செய்யாமல், அதற்கென்று பல குமாஸ்தாக் களை நியமித்து, அவர்களைக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சாசுவதமாகப் பண வசூல் செய்ய வேண்டுமென்றும், அப்படிச் செய்தால், தான் அதில் சம்பந்தப்பட்டிருப்பது திவான் முதலி யோருக்குத் தெரியாமலிருக்கும் என்றும், எவரும் விடுபட்டுப் போகாமல் எல்லோரிடத்திலும் பண வசூல் ஆகுமென்றும் அவன் நினைத்து, அதற்கிணங்க, பல குமாஸ்தாக்களை நியமித்து, ஒவ்வொர் இலாகாவுக்கு இரண்டு மூன்று குமாஸ்தாக்களாக

44