பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

டிருக்கிறார்கள் என்பதை அரசன் கவனித்தான். ரெவினியு தாசில்தார் என்ற உத்தியோகப் பெயரின்மேல் யாரோ ஒருவர் கிறுக்கெழுத்தில் கையெழுத்துச் செய்திருந்தார். அதுவுமன்றி திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரையும் சுத்தமாக அந்த இரசீதில் குத்தப் பட்டிருந்தது. தமது புதிய திவான் அந்தப் பழைய காலத்து முத்திரையை எல்லா தஸ்தாவேஜிகளுக்கும் உபயோகித்து வருகிறார் என்று அரசன் அதற்குமுன் எண்ணிக் கொண்டிருந் தமையால், அந்த வரியும் தமது புதிய திவானாலேயே ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு "ஏன் அப்பா! இந்த வரி எப்போது முதல் அமுலில் இருந்து வருகிறது?" என்றான்.

முன் பேசிய சேவகன் "இது சுமார் ஏழெட்டு வருஷ காலமாக அமுலில் இருந்து வருகிறது" என்றான். அதைக் கேட்டுக்கொண்ட மகாராஜன் "சரி; பிணத்தை இனி விடுங்கள்" என்று கூற, உடனே சேவகர்கள் அநாதைப் பிணத்தை மயானத்திற்குள் கொண்டுபோக அநுமதி கொடுத்தனர். குடியானவர்கள் பிணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர். மகாராஜனும் உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தனது அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். தான் உடனே தனது திவானை வரவழைத்து, அந்த அபூர்வமான வரியைப் பற்றிய பூர்வோத்தரங்களைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும் பதைபதைப்பும் எழுந்தெழுந்து தூண்டினவானாலும், அப்போது இரவு காலம் வந்துவிட்ட தாகையால், ஒரு வேலைக்காரனை அழைத்து, காலையில் தான் திவானுடன் அவசரமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டு மாதலால், மறுநாட்காலை பத்து மணிக்கு அவர் வந்து தம்மைப் பார்க்க வேண்டும் என்று அந்த வேலைக் காரன் மூலமாக திவானுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனாலும் அரசனுக்கு அன்றைய இரவு முழுதும் தூக்கம் பிடிக்கவில்லை. உயிருடன் இருக்கும் மனிதருக்கு வரி ஏற்படுத்துவதே முறையன்றி, இறந்து போனவருக்கு வரி ஏற்படுத்துவது அரசனுக்குப் புதுமையாகவும் தான் அதற்கு முன் எவ்விடத்திலும் கேட்டறியாத விந்தையாக இருந்தது. அத்தகைய அக்கிரமமான வரியை விதிக்க மேதாவியும் சட்ட நிபுணருமான தனது திவானுடைய மனதும் இடங்கொடுத்ததா என்ற ஆச்சரியமும் மலைப்பும் தோன்றி வதைத்துக் கொண்டே

55