பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப் பூம்பட்டினம்

167


பசிதீர அமுதளித்துக் காஞ்சி நகரத்தை யடைந்து அங்கே பேரின்ப நிலையாகிய வீடுபேறெய்தியதும் ஆகிய வரலாற்றுச் செய்திகள் கற்புடைப் பெண்டிர் பலர் வாழ்ந்த இப்புகார் நகரத்தின் உயர்ந்த மக்கட்பண்பினை நன்கு புலப்படுத்து வனவாகும்.

பொதுவறு சிறப்பிற் புகார்

முடியுடை வேந்தர் மூவருள்ளும் தொடி விளங்கு தடக்கைச் சோழர்குலத்துதித்த பெரு வேந்தர்களுடைய செங்கோல் முறையாகிய அறநெறியும், இமயம்வரை படை யெடுத்துச் சென்று அம்மலைமீது புலியிலச்சினையைப் பொறித்த அன்னோர்தம் பெருமைமிக்க வீரச்செயலும், செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கவல்ல அவர்தம் பேராற்றலும் அவர்கீழ் வாழ்ந்த சோழநாட்டுக் குடிமக்களது நற்பண்புகளும் அன்னோரது உலையா உழைப்பினாலும் இயற்கை வளத்தாலும் அந்நாட்டிலுளவாம் உணவுப் பெருக்கமும், அந்நாட்டை வளப்படுத்தும் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும், மக்கள் மேற்கொண்டு செய்த பல்வகைத் தொழில் நலமும், வாணிக வளர்ச்சியும், இயல் இசை நாடகம் சிற்பம் ஓவியம் முதலிய கலைத் திறங்களும் இவையனைத்தும் ஒருங்கே கண்டு களித்தற்குரிய நிலைக்களமாய்த் திகழ்ந்த காவிரிப் பூம்பட்டின மாகிய இம்மூதூர், தமிழ்மக்களது தீவினைப் பயனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிறப்குதியில் ஏற்பட்ட கடற் பெருக்கால் சிதை வுற்றழிந்தமை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை யென்னும் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளும் மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது அவ்விரு காப்பியங்களின் முகப்பில் அமைந்த பதிகங்களால் நன்கு விளங்கும். எனவே கடல்கோளாற் சிதைவுற்றமை சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகட்குத் தெளிவாகத் தெரிந்த செய்தியே யாதல் வேண்டும். சேரன் செங்குட்டுவனும் அவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை வயிற்றிற்