முதற்குலோத்துங்க சோழன்
13
ஆதித்த கரிகாலன் இளவரசுப்பட்டங் கட்டப் பெற்றான். இவன் பெருவீரன்; பாண்டியனைப் போரில் வென்றமை பற்றி 'வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப் பாராட்டப் பெற்றனன். சில ஆண்டுகளுக்குள் இவன் பகைவரது சூழ்ச்சியாற் கொல்லப் பட்டனன்.
பின்னர், கண்டராதித்தரது திருமகனாகிய உத்தம சோழன் கி.பி. 970-ல் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 985-ல் உத்தம சோழன் இறக்கவே, இரண்டாம் பராந்தகசோழனது ரண்டாவது மகனாகிய முதலாம் இராசராசசோழன் அரியணை ஏறினான்.
சோழமன்னருள் பல்வகையானும் பெருமையுற்றுப் பெருவீரனாய் விளங்கியவன் இவ்வேந்தனே என்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது. இவனது ஆளுகையில் சோழ மண்டலம் மிக உயரிய நிலையை எய்திற்று. திருநாரையூரில் வாழ்ந்த; ஆதிசைவராகிய நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியாரைக் கொண்டு சைவ சமய குரவர்களது திருப்பதிகங் களைத் திருமுறைகளாகத் தொகுப்பித்தவன் இம்மன்னனே யென்பர். இவனுக்கு அக்காலத்தில் இட்டு வழங்கிய சிவபாத சேகரன் என்ற பெயரொன்றே இவன் சைவ சமயத்தில் எத்துணை ஈடுபாடுடையவனா யிருந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றது. ஆயினும் இவன் பிறமதத்தினரை என்றும் துன்புறுத்திய வனல்லன்; அன்னோருக்கு மிக்க ஆதரவுகாட்டி யொழுகிவந்தனன் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் உள.
சோழ மன்னர்களது பெருமைக்கும், புகழுக்கும் அக்காலத்திய சிற்ப நுட்பத்திற்கும் ஓர் அறிகுறியாய் இப்போது தஞ்சைமாநகரின் கண் விளங்குகின்ற ‘இராசராசேச்சுரம்' என்ற பெரியகோயிலை எடுப்பித்தவன் இம் மன்னர்பெருமானே யாவன் என்பது ஈண்டு அறியத் தக்கது. இவ்வேந்தன், வேங்கி, கங்கபாடி, நுளம்ப பாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்ட பாடி முதலான நாடுகளை வென்று தன்னடிப் படுத்திப் புகழெய்தியவன். இவற்றுள் வேங்கி என்பது கிருஷ்ணை கோதாவரி என்ற இருபேராறுகளுக்கு மிடையில் கீழ் கடலைச்