முதற்குலோத்துங்க சோழன்
63
சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது; அதிராசராசமண்டலம் என்பது கொங்கு நாடாகும்; இது கோயம்புத்தூர் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது.
1
இனி, ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது, முதல் இராசராச சோழன் காலத்தில் சோழமண்டலம், இராசேந்திர சிங்கவளநாடு, இராசாசிரய வளநாடு, நித்தவிநோதவளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக் கொண்டார் வளநாடு, அருமொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்னும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். உதாரணமாக, உய்யக் கொண்டார் வள நாட்டை எடுத்துக்கொள்வோம். அஃது அரிசிலாற்றுக்கும் காவிரியாற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு ஆகும் என்பது தஞ்சையிலுள்ள இராசராசேச் சுரத்திற் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.2 இங்குக் குறிக்கப்பெற்றுள்ள வளநாடுகளின் பெயர்கள் எல்லாம் முதல் இராசராசசோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர் களுமேயாகும். நம் குலோத்துங்க சோழன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வளநாடுகளுக்குரிய பெயர்களை நீக்கிவிட்டுத் தன் பெயர்களை அவற்றிற்கு இட்டனன். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்க சோழ வளநாடு என்னும் பெயருடையதாயிற்று. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும் கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப் பட்டன. உலகுய்ய
1. S.I.I.Vol. II Introduction pages 24 to 27
2.
அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பள்ளிச் சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம்' - S.I.I. Vol. II,Ins, No. 4; கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவிலுள்ள நிலப்பரப்பு, விருதராச பயங்கர வளநாடு என்று வழங்கிற்று என்பது மாயூரந்தாலூகா இலுப்பைப் பட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.