பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

79

விரோதமான காரியங்களைச் செய்யத் தொடங்கியதோடு சோழ மன்னனிடத்தில் அன்புடையவர்களாய் நிலவிய இராசராசக் கற்குடிமாராயன், இராச கம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் முதலான பாண்டிநாட்டுப் படைத்தலைவர்களை அந்நாட்டை விட்டு வெள்ளாற்றுக்கு வடக்கே போகுமாறும் செய்தனன். மதுரைக் கோட்டை வாயிலிலிருந்த சிங்களப் படைத் தலைவர் களின் தலைகளையும் எடுத்துவிடும்படி செய்தனன். இந் நிகழ்ச்சிகளை யறிந்த இராசாதிராச சோழன், தான் செய்த பேருதவிகளை மறந்து பகைஞனோடு சேர்ந்து கொண்ட குலசேகர பாண்டியனை அரியணையினின்று நீக்கி, பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டை அளிக்குமாறு தன் அமைச்சன் வேதவனமுடையான் அம்மை யப்பன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை யிட்டனன். உடனே, அவன் மதுரைமா நகர்மீது படையெடுத்துச் சென்று மிகச் சுருங்கிய நாட்களில் குலசேகரபாண்டியனை வென்று, வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டை யளித்து அதனை யாண்டுவருமாறு செய்தான்.' எனவே, கி.பி.1168-ஆம் ஆண்டில் இராசாதிராசசோழன் பேருதவியினால் பாண்டி நாட்டைப் பெற்று அரசாண்டுவந்த இக் குலசேகர பாண்டியன், கி.பி. 1175-ஆம் ஆண்டில் தன்னுடைய தகாத செயல்களால் அதனை இழந்துவிட்டமை குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவனைப்பற்றி ஒன்றுந் தெரியவில்லை. செய்ந்நன்றி மறந்து இவன் புரிந்த அடாச் செய்கைகள் இம்மையிலேயே இவனுக்குப் பேரின்னலை விளைத்து இவனைக் கரந்துறையுமாறு செய்தமை அறியத்தக்கதாகும்.

சடையவர்மன் வீரபாண்டியன்

இவன் மதுரையில் குலசேகரபாண்டியனால் கொல்லப் பட்ட பராக்கிரம பாண்டியனுடைய மகன். இவனது மெய்க் கீர்த்தி ‘பூமடந்தையும் சயமடந்தையும்' என்று தொடங்கும்.3

1.

இவ்வெள்ளாறு பாண்டிநாட்டின் வட எல்லையில் அறந்தாங்கித் தாலூகா வழியாக ஓடிக் கடலில் கலக்கும் ஓர் ஆறாகும். இவ்வாற்றின் தென்புறத்தில் பாண்டிநாடும் வடபுறத்தில் சோழநாடும் இருத்தல் அறியத்தக்கது.

2. Ep. Ind., Vol. XXII, p. 86.

3. T. A. S., Vol. II, pp. 18-20.