பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

அவர்களுள் வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டில் ஒரு பகுதியும் முடியும் வழங்கினான். இவன் புதல்வர்களான வீரகேரளனுக்கும் பருதிகுலபதிக்கும் தன்பக்கமிருந்துண்ணும் சிறப்புச் செய்தமையோடு 'இருநிதியும் பரிசட்டமும் இலங்கு மணிக்கலனும் நல்கி'னான். இந்நிகழ்ச்சிகள் எல்லாம் எப்போது நிகழ்ந்தன என்பது தெரியவில்லை. எனினும், கி. பி. 1180-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் இவை நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது திருவக்கரை, திட்டைக்குடி என்ற ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால்' அறியப் படுகின்றது. பிறகு, வ்வீரபாண்டியனைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் தனக்களித்த பாண்டி நாட்டின் ஒரு பகுதியைத் தன் இறுதிக் காலம் வரையில் ஆட்சிபுரிந்து இறந்தனனாதல் வேண்டும். தன் வாழ்நாட்களுள் பெரும்பகுதியை அல்லல் வாழ்க்கையில் நடத்திய இப்பாண்டிவேந்தன் இறுதியில் சிலகாலம் அமைதி யாயிருந்து இறந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

மாறவர்மன் விக்கிரம பாண்டியன்

வன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுடைய புதல்வன் மூன்றாங் குலோத்துங்க சோழன் பேருதவியினால் கி.பி.1180-ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைப் பெற்று இவன் ஆட்சிபுரியத் தொடங்கியமை முன்னர் விளக்கப்பட்டது. வீரபாண்டியன் சேரமன்னன் உதவிபெற்று மறுபடியும் மதுரைமீது படையெடுத்துச் சென்ற போது, இவன் அச்சோழ அரசன் துணைகொண்டு தன் நாட்டைக் காத்துக் கொண்டான். இவ்வேந்தன் தன் வாணாள் முழுமையும் குலோத்துங்க சோழன்பால் பேரன்புடையவனாய் ஒழுகியதோடு பாண்டி நாட்டில் சில ஆண்டுகள் அமைதியுடன் ஆட்சிபுரிந்தும் வந்தமை குறிப்பிடத்தக்கது. இவன் கி. பி. 1190-ஆம் ஆண்டில் இறந்தனன் என்று தெரிகிறது.

1. Ins. 190 of 1904; S. I. I., Vol. VIII, No. 296.