பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

85

வரலாற்றை உணர்ந்துகொள்வதும் அத்துணை எளிதாக ல்லை. படி எடுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் எல்லாம் அச்சிடப்பட்டு வெளிவந்தாலன்றி இத்தகைய ஐயங்களும் குழப்பங்களும் நீங்கமாட்டா என்பது ஒருதலை.

முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன்

இவன் கி.பி. 1190-ல் முடிசூட்டப்பெற்று, கி. பி. 1218 வரையில் மதுரையம்பதியிலிருந்து பாண்டிநாட்டை ஆட்சி புரிந்தவன். இவன் மூன்றாங் குலோத்துங்க சோழனது பேராதரவிற் குள்ளாகி, அவன் அளித்த பாண்டிநாட்டைப் பெற்று, அங்கு அரசாண்டு கொண்டிருந்த மாறவர்மன் விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் ஆவன். இவன் மெய்க்கீர்த்தி ‘பூவின்கிழத்தி` என்று தொடங்கும். அஃது இவனைப் புகழ்ந்து கூறுகின்றதே யன்றி இவன் வரலாற்றை விளக்குவதாயில்லை. இவன் கல்வெட்டுக்கள், மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் காணப்படுவதால் இவனது ஆட்சி பாண்டி நாடு முழுமையும் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று ஐயமின்றிக் கூறலாம்.

இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில், சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக விருந்து அரசாண்ட மூன்றாங் குலோத்துங்க சோழன், கொங்குநாட்டுக் கருவூரைக் கைப்பற்றி அங்குச் சோழ கேரளன் என்ற பெயருடன் விசயமாமுடிசூடிய பின்னர், பாண்டியரும் தனக்குத் திறை செலுத்தி வருவதால் மதுரை மாநகரில் வீராபிடேகம் செய்துகொள்ள வேண்டுமென்று கருதினான். அந்நாட்களில் இக்குலசேகர பாண்டியன் அதற்குடன் படாமல் அச்சோழ மன்னனோடு வெளிப்படையாகப் பகைமை கொள்ளவுந் தொடங்கிவிட்டான். இவன் தந்தை விக்கிரம பாண்டியனுக்குத் தான் நாடும் அரசும் வழங்கி, உள்நாட்டில் குழப்பத்தை ஒழித்து, அமைதி நிலவுமாறு செய்ததை இவன் முற்றிலும் மறந்து, தனக்கு முரண்பட்டு நிற்றலை உணர்ந்த குலோத்துங்க சோழன், பெருஞ்சினங் கொண்டு பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான்.

1. S. I. I., Vol. V, Nos. 302, 412 and 415.