பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

அரசனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனும் ஆவர் என்பது அறியற்பாலதாகும். இவன் தில்லைமாநகரிலுள்ள திருக்கோயிலில் சிவகாமக் கோட்டத்திற்குத் தென்புறமும் சிவகங்கைக்கு மேற்புறமுமுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் கி. பி. 1267-ஆம் ஆண்டில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டமை பற்றி அம் மண்டபம் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் எய்துவதாயிற்று. அம் மண்டபத்தின் முன்புறத்தில் அப்பெயர் வரையப் பெற்றிருத்தலை இன்றுங் காணலாம்.'

இனி, 'திருமகள் வளர்' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் இவன் ஈழநாட்டில் போர் புரிந்து அந்நாட்டரசருள் ஒருவனைக் கொன்று மற்றொருவனுக்கு முடிசூட்டியதும் திருக் கோணமலை, திரிகூடகிரி என்பவற்றில் கயற்கொடி பொறித்ததும் சோழ மன்னனோடு காவிக்களம் என்ற ஊரில் போர் செய்ததும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தெளிவாக விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் இதுகாறுங் கிடைக்க வில்லை.

இவன் நிகழ்த்திய போர்களுள் பல, சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, முடிமன்னனாகிய சுந்தரபாண்டியனது ஆணையின்படி வீரபாண்டியன் படைத்தலைமை பூண்டு அப் போர்களைப் புரிந்திருத்தல் வேண்டும் என்று கொள்வதே பொருத்த முடையதாகும்.

இச்சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சியின் இருபத்து மூன்றாம் ஆண்டு முடியவுள்ள பல கல்வெட்டுக்கள் புதுக் கோட்டை நாட்டிலும் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட் டொன்று திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கல்லிடைக் குறிச்சியிலும் இருத்தலால்' இவ்வேந்தன் கி. பி. 1281 வரையில் உயிர் வாழ்ந்திருந்தனனாதல் வேண்டும்.

1. Ins. 616 of 1929-30. தில்லையிலுள்ள நூற்றுக்கால் மண்டபம், விக்கிரம சோழனுடைய படைத்தலைவருள் ஒருவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயனால் கட்டப் பெற்றதாகும். அதிலுள்ள பன்னிரண்டு தூண்களில் விக்கிரமசோழன் திருமண்டபம் என்று வரையப்பட்டிருத்தல் அறியற் பாலது. பிறகு அது வீரபாண்டியன் திருமண்டபம் என்ற பெயர் எய்தியது.

2. Ins, 117 of 1907.