பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

அமைதியுண்டு பண்ணி முன் போலவே அந்நாடுகள் தனக்குக் கப்பஞ் செலுத்திவருமாறு செய்திருத்தல் வேண்டும். அந்நிகழ்ச்சிகளையே சேரமாதேவிக் கல்வெட்டு அவ்வாறு கூறுகின்றது என்பது உணரற்பாலதாம்.

சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளிலுள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஆகவே, அந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது தேற்றம். அன்றியும், இவனுக்கு முன் அரசாண்ட முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆளுகையில் பாண்டியர் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனுடைய ஆட்சிக்காலத்திலும் அங்ஙனமே இருந்தன என்பதில் ஐய மில்லை. எனவே சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல் இம்மாறவர்மனும் 'எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ குல சேகர பாண்டியன்' என்று வழங்கப்பெற்று வந்தமை' சாலப் பொருந்துமெனலாம். இவன் தன் பேரரசிற்குட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக விருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களை ஆங்காங்கு அரசப்பிரதிநிதிகளாயிருந்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வேந்தர் பெருமான், சேரன் சோழன் போசளன் முதலான அரசர்களைப் போரில் வென்று, அன்னோர் நாடு களிலிருந்து கைப்பற்றிக் கொணர்ந்த பொருளைக்கொண்டு திருநெல்வேலித் திருக்கோயிலில் ஒரு திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் என்று அங்கு வரையப்பெற்றுள்ள கல்வெட் டொன்று கூறுகின்றது.' இதனால் இவன் நெல்லையப்பரிடம் பேரன்புடையனாயிருந்தனன் என்பது நன்கு புலனாதல் காண்க.

இனி, நம் குலசேகரபாண்டியன் காலத்தில் அரசப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன் என்போர். அவர்களைப் பற்றிய வரலாறுகள் நன்கு புலப்படவில்லை. எனினும், ஆங்காங்குக் காணப்படும்

1. Ins. 526 of 1926; Ins 79 of 1927; S. I. I., Vol. VIII, Nos. 393 and 396. 2. Ins. 29 of 1927.