பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

புதல்வர் இருவருடைய செல்வங்களையும் மாலிக்காபூர் கொள்ளை கொண்டு வெற்றியுடன் டில்லிமா நகருக்குத் திரும்பிச் சென்றானென்று குறித்துள்ளனன்.' இவற்றால் பாண்டிநாடு அந்நாளில் எத்தகைய துன்ப நிலையில் இருந்தது என்பதை எளிதில் உணரலாம்.

2

பாண்டி மன்னர் நிலைமையினையும் உள்நாட்டில் நேர்ந்த குழப்பங்களையும் நன்குணர்ந்த சேர மன்னன் இரவிவர்மன் குலசேகரன் என்பான் பாண்டிய இராச்சியத்தின் மீது படை யெடுத்துச் சென்று சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனன். அவன் கல்வெட்டுக்கள் திருவரங்கம், காஞ்சி, பூந்தமல்லி என்னும் ஊர்களிற் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுக்களில் வீரபாண்டியனையும் சுந்தர பாண்டியனையும் அவன் வென்ற செய்தி குறிக்கப்பெற்றுளது. இந்நிலையில், பாண்டிய இராச்சியத்தில் நிலவிய குறுநில மன்னர்களும் திறைமறுத்துத் தனியரசுபுரியத் தொடங்கினார்கள். அங்ஙனம் சுயேச்சையாகத் தம் நாட்டை ஆட்சிபுரியத் தொடங்கியவர்கள் தொண்டை மண்டலத்துப் படைவீட்டு இராச்சியத்துச் சம்புவராயர்களும் பாண்டிய நாட்டிலிருந்த வாணாதிராயர்களும் ஆவர். ஆகவே, குலசேகர பாண்டிய னாட்சியில் மிகச் சிறந்த நிலையிலிருந்த பாண்டிய இராச்சியம் அவன் புதல்வர்கள் ஆளுகையிற் பலவகையிலும் தாழ்வுற்றமை உணரற்பாலது.

வீரபாண்டியன் ஆட்சியின் பிற்பகுதியில் தலைநகராகிய மதுரையை மகமதியத் தலைவன் ஜலாலுடீன் அசன்ஷா என்பவன் கைப்பற்றினான். அவன் டில்லிமா நகரிலிருந்த மகமதுபின் துக்ளக் என்னும் அரசனால் தென்னாட்டிற்கு அனுப்பப் பட்டவன். அவன் பாண்டிய அரசனை வென்று நாட்டைக் கவர்ந்து கொண்டதோடு டில்லிமன்னன் பிரதிநிதியாக

1. பாண்டியர் இருவர்க்கும் உரிய 612 யானைகளும் 20000 குதிரைகளும், 96000 மணங்கு பொன்னும் முத்துக்களும், அணிகலங்களும் அடங்கிய பல பெட்டிகளும் ஆகிய இவற்றை மாலிக்காபூர் கொள்ளையடித்துச் சென்றான் என்று பார்னி கூறியுள்ளமையறியத்தக்கது. (Elliot and Dowson. Vol, III, p. 204)

2. Ins. Nos. 33 and 34 of 1911.

3. தமிழ்ப் பொழிலிரண்டாந்துணரில் (பக்கம் 142-150) யானெழுதியுள்ள 'சம்புவராய மன்னர்’ என்ற கட்டுரையால் இவர்கள் வரலாற்றை அறியலாம்.