பாண்டியர் வரலாறு
133
நீதிதவறாது செங்கோல் செலுத்துங் கடமை இவ்வேந்தனுக்கு உரியதாகும். பாண்டி வேந்தர்கள் தமக்குப் பின்னர்ப் பட்டத் திற்கு உரியவர்களாயுள்ள தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டங் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் பழக்குவது வழக்கம். சில சமயங்களில் இவர்கள் தம் தம்பியரையும் இத்துறைகளில் பழக்கி வருவது உண்டு. தென்பாண்டி நாட்டிலுள்ள கொற்கை பாண்டியரது முதன்மை வாய்ந்த துறைமுகப்பட்டினமாயி ருந்தமையின் இளவரசர்கள் அந்நகரத்தில் தங்கியிருப்பது வழக்கமாயிருந்தது. இவ்வுண்மையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையாற் கண்ணகிக்கு இடர்விளைத்து உயிர் துறந்த பின்னர், கொற்கையிலிருந்த இளவரசனாகிய வெற்றிவேற்செழியன் மதுரை மாநகரத்திற்குச் சென்று முடிசூட்டிக் கொண்டான் என்று ஆசிரியர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ள ஓர் அரிய செய்தியினால் நன்கு உணரலாம். கி. பி. 11-ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாண்டி மன்னர் ஐவர் ஒரே சமயத்தில் பாண்டிமண்டலத்தில் ஆட்சி புரிந்தனர் என்பது கலிங்கத்துப்பரணியாலும் சில கல்வெட்டுக் களாலும் அறியப்படுகின்றது.' இன்னோர் அம்மண்டலத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆண்டுவந்தனர் போலும்.
3. அரசியல் அதிகாரிகள்
பாண்டியரது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர்களாக அமர்ந்து ஆட்சியை நன்கு நடைபெறச் செய்தவர்கள் அமைச்சர், படைத்தலைவர், அரையர், நாடுவகை செய்வோர், வரியிலார், புரவுவரித்திணைக்களத்தார், திருமுகம் எழுதுபவர் முதலானோர் ஆவர். இவர்களுள், அரையரெனப் படுவோர் உள்நாட்டிற்குத் தலைவர்களாக விளங்கிய நாட்டதி காரிகள்; இவர்கள் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து, குடிகளின் நலன்கள், அறநிலையங்கள், நியாயம் வழங்குமுறை முதலான
1. சிலப்பதிகாரம்-உரை பெறு கட்டுரை;
மேற்படி-நீர்ப்படைக்காதை, வரிகள் 126-138.
2. கலிங்கத்துப்பரணி-தாழிசை 368,
S.I.I. Vol. III, Nos. 70, 71 and 72.