பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

119

என்பதும் அன்பிற் செப்பேடுகளால்' அறியப்படுகின்றன. இராசராசன் மனைவியருள் பஞ்சவன் மாதேவி என்பாள் பழுவேட்டரையன் மகள் ஆவள்”. இச்சோழ மன்னன் காலத்தி லிருந்த பழுவூர்க் குறுநிலமன்னன் அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவன் என்பவன். இவன் குறுநில மன்னர்க்குரிய எல்லாச் சிறப்புக்களும் உடையவனாய் இனிது வாழ்ந்தவன் என்பது பழுவூரில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.

கொங்கு நாட்டிலிருந்த கொல்லிமழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசனுக்குக் கப்பஞ் செலுத்தி வந்த ஒரு குறுநில மன்னன் என்பது திருச்செங் கோட்டுச் செப்பேடுகளால் புலனாகின்றது1. இராசராசன் தந்தையாகிய சுந்தர சோழன் ஈழ நாட்டு வேந்தனோடு நிகழ்த்திய போரில் இக்கொல்லி மழவன் தந்தை சோழர் பக்கத்திலிருந்து போர்புரிந்து அந்நாட்டில் உயிர்துறந்தான். எனவே, கொங்கு மண்டலத்திலிருந்த இக்குறுநில மன்னர் குடியினர் தம் பேரரசராகிய சோழர்கட்குப் போர் நிகழ்ச்சிகளில் உதவிப்படை யனுப்பி உண்மையன்புடன் ஒழுகி வந்தனர் என்பது பெறப்படுதல் காண்க.

ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லத்தில் திருவையேச் சுரம் என்னும் கோயில் ஒன்று எடுப்பித்து அதற்கு அர்ச்சனா போக மாக நிலமளித்துள்ள திருவையன் சங்கரதேவன் என்பவன் நம் இராசராசனுக்குத் திறை செலுத்திக் கொண்டு அப்பக்கத்தில் ஆண்டுகொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்".

கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரிலிருந்த வேளான் சுந்தரசோழன் என்பான் இராசராசனுக்கு உட்பட் டிருந்த ஒரு சிற்றரசன் ஆவன். இவன் தந்தை பராந்தகன்

1. Ep. Ind., Vol. XV, page 50.

2. Ins. 385 of 1924.

3. S. I. I., Vol. V, Nos. 667, 670, 671, 672 and 676.

4. Ibid, Vol. III, No. 213.

5. Ibid, No. 212.

6. S. I. I., Vol. III, No. 51.