பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

141

சிறந்த படைத்தலைவன் ஒருவன் தலைமையில் வடநாட்டிற்கு அனுப்புவது இன்றியமை யாததாயிற்று. ஆகவே, இவன் தன் படைத்தலைவனைப் பெரும் படையுடன் வடக்கே அனுப்பி, கங்கைக்கரை வரையிலுள்ள அரசர்களை வென்று அன்னோர் தலைகளில் கங்கைநீர் நிரம்பிய குடங்களைக் கொண்டு வருமாறு ஆணையிட்டனன். சோழ நாட்டுப் படையும் வட நாட்டிற்குப் புறப்பட்டது.

கோதாவரி, கிருஷ்ணை ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கி நாடு, சோழர்க்கு நெருங்கிய உறவினரான கீழைச் சளுக்கிய மன்னர்களால் அந்நாட்களில் ஆளப்பட்டு வந்தமையாலும் அதற்குத் தெற்கேயிருந்த நாடுகள் எல்லாம் இராசேந்திரன் ஆட்சிக்குட்பட்டிருந்தமையாலும் அப்படை யெழுச்சி வேங்கி நாட்டிற்கு வடக்கே தொடங்கிற்று எனலாம். அதில் முதலில் கைப்பற்றப்பட்டது சக்கரக் கோட்டமேயாகும்.

சக்கரக்கோட்டம் என்பது விசாகப்பட்டினம் ஜில்லா விற்கு வடமேற்கே மத்தியப் பிரதேசத்தில் வத்ச இராச்சியத்தில் இருந்த ஒரு நகரமாகும். அஃது அவ் விராச்சியத்தின் தலை நகராகிய இராசபுரத்திற்கு எட்டு மைல் தூரத்தில் இந்திராவதி யாற்றின் தென்கரையில் உள்ளது; இக்காலத்தில் சித்திரக் கோட்டம் என்று வழங்குகின்றது.1 நாகர் மரபினர் எனவும் போகவதி புரத்தலைவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்ட ஓர் அரசர் வழியினர், கி. பி. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் அச் சக்கரக் கோட்டத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்தனர். அன்னோர் நாகர் மரபினராதல் பற்றி அவர்கள் அரசாண்ட நாடும் மாசுண தேசம் என்று வழங்கப் பெற்று வந்தது. அதற்குச் சக்கரக்கோட்ட மண்டலம் என்னும் வேறொரு பெயரும் உண்டு. இராசேந்திரனுடைய படைத் தலைவனால் கைப்பற்றப்பட்ட மதுரை மண்டலம், நாமணைக் கோணம், பஞ்சப் பள்ளி ஆகிய இடங்கள் அந்த வத்ச இராச்சியத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனவே, அவை வேங்கி நாட்டிற்கு வடக்கே இருந்தன என்பது ஒருதலை.

1. Ep. Ind., Vol. IX, pp. 178 and 179. சித்திரக் கோட்டம் - Chitrakut.