பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

133

ஆட்சி புரிந்து வருவானாயினான். அக் காலமுதல் இராசாதி ராசன் ஆட்சிக் கால முழுவதும் வீரபாண்டியனே' மதுரையி லிருந்து அரசாண்டு வந்தனன் என்பது அறியற்பாலதாகும்.

நம் இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அப் பாண்டி நாட்டுப் போர் கி. பி. 1167 முதல் கி. பி. 1175 வரையில் நடைபெற்றதாதல் வேண்டும். இவ்வேந்தன் அத்துணையாண்டு களும் அப் போரில் ஈடுபட்டிருந்தமை உணரற் பாலதாகும். குலசேகர பாண்டியனுடைய வேண்டுகோளின் படி இவன் பாண்டி நாட்டுப் போரில் கலந்துகொண்டானெனினும், அவன் நன்றி மறந்து சோழ நாட்டிற்குத் தீங்கிழைத்தற்கு முயன்றமை பற்றி அவனையே பாண்டி நாட்டுச் சிங்காதனத் திலிருந்து நீக்குவது இன்றியமையாத தாயிற்று. அந்நிலையில் இவன் தனக்குப் பகைவனா யிருந்த பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டியனை ஆதரித்து மதுரையில் அரியணையில் அமர்த்து மாறு நேர்ந்தது எனலாம். இராசாதிராச சோழன் ஆட்சியின் இறுதியிலிருந்த பாண்டி நாட்டு நிலை இதுவேயாகும். எனவே, பாண்டி நாட்டுப் போரில் நம் இராசாதிராசன் எண்ணம் நன்கு நிறைவேறியது என்பது ஒருதலை. அப்போரில் சோழ நாட்டுப் படை சிற்சில காலங்களில் தோல்வி யெய்தும்படி நேர்ந்த தாயினும், சிங்களப் படைகளைப் பன்முறை வென்று பேரழிவிற் குள்ளாக்கியமையோடு சிங்களவரைப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும். அச் செயல் நம் இராசாதிராசனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்திருக்கும் என்பது திண்ணம். அவ் வெற்றி காரணமாக, இவன் 'மதுரையும் ஈழமும் கொண்ட* கோ இராசகேசரிவர்மன்' என்று வழங்கப் பெற்றனன். சோழ நாட்டுப் படை ஈழத்தில் போர் புரிந்து வாகை சூடியமை பற்றி இவன் ஈழமுங் கொண்டவன் என்று கூறப்பெற்றனன் போலும். ஈழ நாட்டில் ஒரு சிறு பகுதிகூட இவன் ஆட்சிக் குட்பட்டிருக்க வில்லை என்று தெரிகிறது.

.

1. இம்முறையில் வீர பாண்டியன் கி. பி. 1175 முதல் 1180 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டான் என்று தெரிகிறது.

2. திருக்கடவூரிலுள்ள இராசாதிராசனது 12-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்தான் இவன் மதுரையும் ஈழமுங் கொண்ட திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று முதலில் குறிக்கப் Olum muoi 6TIT Gor. (Ins. 36 of 1906.)