பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகனாரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன, எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரியும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்திற்றியாண்டு சங்கமிருந் தாரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன்பதின்மர் என்ப, அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்பதாம். இதில் கண்ட செய்திகள் நம் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டு நிற்றலின் இவற்றை ஆராய்ந்து முடிவு கூறுதல் எளிதன்று. எனினும், பாண்டிவேந்தர்கள் தம் தலைநகரில் நிறுவி நடத்தி வந்த தமிழ்க் கழகத்தில் அகத்தியனார் முதற் புலவராயமர்ந்து தமிழாராய்ந்தனர் என்பதும் இவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் அக்கழகத் தார்க்கு இலக்கண நூலாக இருந்தது என்பதும் நன்கு துணியப் படும்.

5. அகத்தியனாரின் மாணவர்கள்

அகத்தியர் புலவர்களுடன் தமிழாராய்ச்சி செய்தமையோடு மாணவர் பலர்க்கும் தமிழ் அறிவுறுத்தினார். இம் முனிவரிடத்து இயற்றமிழ் நூல் கேட்ட மாணவர் பன்னிருவர் ஆவர். அவர்கள், தொல்காப்பியனார், அதங்கோட்டாசான், துராலிங்கனார், செம்பூட்சேய், வையாபிகனார், வாய்ப்பியனார், பனம்பாரனார், கழாரம்பனார், அவிநயனார், காக்கைபாடினியார், நற்றத்தனார், வாமனனார் என்போர். இன்னோர் பன்னிருவரும் தனித்தனி நூல் இயற்றியமையோடு எல்லோருஞ் சேர்ந்து புறப்பொருள் பன்னிருபடலம் என்னும் நூல் ஒன்று இயற்றியுள்ளனர் என்றும் தெரிகிறது. இதனை,