பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

'மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலையிருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த

பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்’

29

என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தினால் நன்குணரலாம். அந்நூல் இந்நாளில் யாண்டும் கிடைக்காமை யால் அழிந்து போயிற்று என்பது ஒருதலை. எனினும் அதன் வழிநூலாக இக்காலத்தில் கிடைத்திருப்பது, சேரமன்னராகிய ஐயனாரிதனார் என்பார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலை என்னும் அரிய நூலேயாம். மேலே குறிப்பிட்டுள்ள மாணவர் பன்னிருவருள், தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுதான் இந்நாளில் உளது. மற்றையோர் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. எனவே இப்போதுள்ள நூல்களுள் இத்தொல்காப்பியமே மிகப் பழமை வாய்ந்தது என்று கூறலாம். இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர், அகத்தியரின் மாணவருள் ஒருவரும் தொல்காப்பி யனாரின் ஒரு சாலை மாணவரும் ஆகிய பனம்பாரனார் ஆவர்.

இனி, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதி காரத்தின் உரைப்பாயிரத்தில் 'தேவ இருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருள் சிகண்டி என்னும் அருந்தவமுனி... செய்த இசை நுணுக்கமும்' என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளமையால் அகத்தியருடைய மாணாக்கருள் சிகண்டியார் என்பவர் ஒருவர் என்பதும் அவர் 'இசை நுணுக்கம்’ என்னும் இசைத் தமிழ் இலக்கணம் ஒன்று இயற்றியவர் என்பதும் தெள்ளிதிற் புலனாகின்றன. பிற ஆசிரியர்கள் கூறியுள்ள அகத்தியர் மாணவர் பன்னிருவருள் சிகண்டியார் பெயர் காணப்படவில்லை. ஆகவே, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றுக்கும் வெவ்வேறாகப் பன்னிரண்டு மாணாக்கர்கள் இருந்திருத்தல் வேண்டும் என்று எண்ணுவதற்கு இடம் உளது. அன்றியும், இம் முனிவர் பெருமான்பால் மருத்துவம், சோதிடம், முதலானவற்றைக் கற்ற மாணவர் பலர்