பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


திருவிசய மங்கை என்னுந் திருக்கோயில் கற்றளியாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை நான்காம் கல்வெட்டு உணர்த்துகின்றது. எனவே, இது முதலாம் இராசராசசோழனால் தஞ்சைமா நகரின்கண் எடுப்பிக்கப்பெற்ற 'இராசராசேச்சுரம்' என்னும் ஆலயத்தினும் பழமை வாய்ந்த கற்றளி யாகும். மதுராந்தக சோழன் காலத்துக் கோயிலமைப்பு எங்ஙனம் இருந்தது என்று ஆராயப்புகுவார்க்கு இக்கற்றளி பெரிதும் பயன்படும். இதனை எடுப்பித்தவன் குவளால முடையான் அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான். இவன் மதுராந்தக சோழனது பெருந்திறத்து அதிகாரிகளுள் ஒருவன்; இவ்வேந்தனால் கொடுக்கப்பெற்ற 'விக்கிரமசோழமாராயன்' என்னும் பட்டம் உடையவன். 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்னும் வஞ்சித் திணைக்குரிய துறை ஒன்றால் அரசர்கள் தம் அதிகாரிகளுள் தக்கோர்க்கு இங்ஙனம் பட்டம் அளித்துப் பாராட்டுவது பழைய வழக்க மென்பது அறியப்படுகின்றது. இனி, இவ்விக்கிரமசோழமாராயனது சிவ பக்தியின் மாண்புபெரிதும் போற்றத்தக்கது. இத்தலைவன் திருவிசய மங்கையைக் கற்றளியாக எடுப்பித்ததும் இத்திருக்கோயிற்கு ஆண்டொன்றிற்கு ஆயிரக்கல நெல் வருவாயுள்ள நெடுவாயில் என்னும் ஊரை நிபந்தமாக விட்டு அதனை இறையிலியாக்கியதும் நூறு கழஞ்சு பொன் அளித்ததும் பிறவும் இவனது சிவபக்தியின் முதிர்ச்சியை நன்கு விளக்குதல் காண்க. இவனைப் போலவே இவனது மனைவிமார்களும் சிவபக்தியுடையவர்களாகத் திகழ்ந்தனர். என்பது இரண்டாவது கல்வெட்டினாலும் மூன்றாவது கல்வெட்டினாலும் புலப்படுகின்றது. பிறசெய்திகளை இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்துணர்க.