பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

81


உண்மை வரலாற்றை அறிந்து எழுதுவதற்குப் பயன்பட்டு வருதல் ஓரளவு மகிழ்ச்சி அளிக்கின்றது. அச்செப்பேடுகள், கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்ற போதும் பொதுமக்கள் இல்லம் முதலியன அமைத்த போதும் நிலத்தை அகழ்ந்த ஞான்று எதிர்பாராத நிலையில் அகப்பட்டவையேயாம்.

இதுகாறும் கிடைத்துள்ள சோழ மன்னர்களின் செப்பேடுகளுள் வரலாற்று ஆராய்ச்சிக்கு உறுதுணையாகப் பெரிதும் பயன்படுவன நான்காகும். அவை, சுந்தர சோழனின் (கி.பி. 957 - 970) அன்பிற் செப்பேடுகள், முதல் இராசராச சோழனின் (கி.பி. 985 - 1014) ஆனைமங்கலச் செப்பேடுகள், முதல் இராசேந்திர சோழனின் (கி.பி. 1012- 1044) திருவாலங்காட்டுச் செப்பேடுகள், வீரராசேந்திர சோழனின் (கி.பி. 1063 - 1070) சாராலச் செப்பேடுகள் என்பன. அவற்றுள், சுந்தர சோழனுடைய அன்பிற் செப்பேடுகளே மிக்க தொன்மை வாய்ந்தவை யாகும்.

பல ஆண்டுகளாகத் தமிழ்த் தாய்க்கு அருந்தொண்டுகள் ஆற்றி வரும் நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கிடைத்துள்ள செப்பேடுகளின் தொகுதி, முதல் இராசராச சோழனுடைய அருமைப் புதல்வனும் கி.பி. 1012 முதல் 1044 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து சோழர் பேரரசை யாண்டும் பரப்பி கங்கைகொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயருடன் அரசாண்டவனும் ஆகிய முதல் இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி.பி. 1020ல் அளித்ததாகும். எனவே, இஃது ஏறத்தாழத் தொள்ளாயிரத்து முப்பத்தேழு ஆண்டுகட்கு முன்னர் வரையப் பெற்றதாதல் வேண்டும். இதனால் பண்டைச் சோழ மன்னர்களின் வரலாற்றையும், முதல் இராசேந்திர சோழனுடைய வீரச்செயல் களையும், பெருங் கொடைத் திறத்தையும், சோழர்களின் அரசியல் முறைகளையும், பதினொன்றாம் நூற்றாண்டில் நிலவிய ஊர்கள் ஆறுகள் கால்வாய்கள் முதலானவற்றின் உண்மைப் பெயர்களையும், அக்கால வழக்கங்களையும் மற்றும் பல அரிய செய்திகளையும் இதனால் நன்கறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட நான்கு செப்பேடுகளிலும் காணப்படாத சில அரிய வரலாற்றுச் செய்திகள் இதில் சொல்லப்பட்டிருத்தல் உணரற்பாலதாகும்.