பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 8


2 (1) கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய்
(2) தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேலுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய்.[1]

இவற்றுள் முதலாவது கல்வெட்டு பல உண்மைச் செய்திகளை யுணர்த்துகின்றது. பல்லவ குலத்தினர் பாரத்துவாச கோத்திரத்தினர் என்பதையும் அப்பல்லவ குலத்தில் தந்திவர்மன் என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான் என்பதையும் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங் கிணறு அவ்வேந்தனது ஆட்சியில் நான்காம் ஆண்டில் தோண்டத் தொடங்கப்பெற்று ஐந்தாம் ஆண்டில் அவ்வேலை முடிவுற்றது என்பதையும் அப்பெருங் கிணற்றைத் தோண்டுவித்தவன் ஆலம்பாக்க விசயநல்லூழான் தம்பியான கம்பன் அரையன் என்பதையும் அதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பதையும் அஃது இனிது புலப்படுத்துகின்றது.

நந்திவர்மப் பல்லவ மல்லனது உதயேந்திரம் செப்பேடுகளிலும் காசாக்குடி செப்பேடுகளிலும் பாரத்துவாச முனிவர் பல்லவ மன்னர்களின் முன்னோர்களுள் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார். (South Indian Inscriptions Volume II Part III) பல்லவர்களைப் பாரத்துவாச கோத்திரத்தினர் என்று முதலாவது கல்வெட்டு உணர்த்துவதற்குக் காரணம் இதுவே யாகும். அக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள தந்திவர்மன் கி.பி. 717 முதல் கி.பி. 780 வரையில் நம் தமிழ் நாட்டில் ஆட்சிபுரிந்த நந்திவர்மப் பல்லவ மல்லனது மகன்; கி.பி. 780 முதல் 830 முடிய சோழ மண்டலத்தையும் தொண்டை மண்டலத்தையும் அரசாண்ட நெடுமுடி வேந்தன். எனவே, இவனது ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 785-ல் மேலே குறித்துள்ள திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணற்றின் வேலை முடிவெய்தி அது மக்கட்குப் பயன்படும் நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அப்பெருங்கிணற்றைத் தோண்டு வித்தவன் கம்பன் அரையன் என்பான். இவன் ஆலம்பாக்க விசய நல்லூழான் என்பவனது


  1. இப்பாடலில் ஏகார நெட்டெழுத்திற்குப் பிறகு யகரமெய் வந்திருத்தல் ஆராய்தற்குரியது.