பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

89


ஊரில் தன் அரசன் பெயரால் அமைப்பித்துத் தண்ணீர் இறைத்தற்கு நிபந்தம் விட்டவன் முதல் இராஜராஜ சோழனது பணிமகனும் சோழ மண்டலத்தில் நித்த விநோத வளநாட்டி லுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரில் வாழ்ந்த தலைவனுமாகிய கண்ணன் ஆரூரன் என்பான். நித்த விநோத வளநாடு என்பது முதல் இராஜராஜ சோழன் காலத்தில் சோழமண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகும். சோழ மண்டலம் முதல் இராஜராஜசோழனது ஆட்சிக் காலத்திற்கு முன்னர், பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததே யன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. முதல் இராஜராஜனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் தான் சோழமண்டலம் இராஜேந்திர சிங்கவளநாடு, இராசாச்ரய வளநாடு, நித்த விநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு, அருண்மொழித்தேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்ற ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பலநாடுகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. வள நாட்டைத் தற்காலத்திலுள்ள ஜில்லாவுக்கும் நாட்டைத் தாலுக்காவிற்கும் ஒப்பாகக் கூறுதல் பொருந்தும். வளநாட்டின் உட்பகுதிகளுள் சிலவற்றைக் கூற்றங்கள் என்று வழங்குவதும் உண்டு. மேலே குறித்துள்ள ஒன்பது வளநாடுகளின் பெயர்களும் இராஜராஜ சோழனது இயற்பெயரும் புனைபெயர்களுமேயாம். பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பேயாகும்.

மேலே வரைந்துள்ள கல்வெட்டில் குறிக்கப்பெற்ற நித்த விநோத வளநாடு என்பது தஞ்சாவூர் தாலுகாவின் கீழ்ப்பகுதியும் பாவநாசந் தாலுகாவின் மேற்பகுதியும் மன்னார்குடித் தாலுகாவின் வடபகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும். ஆவூர் கூற்றம், கிழார்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், பாம்புணிக் கூற்றம், நல்லூர் நாடு, கரம்பைநாடு, முடிச்சோணாடு என்பவை நித்த விநோத வளநாட்டின் உட்பகுதிகளாகவுள்ள சிலநாடுகள் ஆகும்.