பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

93


கல்வெட்டில் திருவிரையாக்கலி என்பதற்கு முன்னருள்ள திருவாணை என்னுந் தொடர்மொழி அஃது இன்னது என்பதை இனிது புலப்படுத்துகின்றது. திருவருள் என்பது கடவுளது அருளைக் குறிப்பது போல் திருவாணை என்பதும் ஈண்டுக் கடவுளது ஆணையைக் குறிக்கின்றது. எனவே, சிவபெருமானது ஆணையே திருவிரையாக்கலி எனும் பெயருடைய தாயிருத்தல் காண்க. ஆகவே, விரையாக்கலி என்பது சிவபெருமானது ஆணையேயாதல் அறிந்து கொள்ளற்பாலது. இச்செய்தி, ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வராகிய பட்டினத்துப் பிள்ளையார் அருளிய கோயில் நான்மணி மாலையிலுள்ள ஒரு பாடலாலும் உறுதியெய்துகின்றது. அஃது.


“உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப்பட்ட எல்லையுங் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினுந் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வாண! நீடு
குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீலமேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெரும! நின் தாதவிழ் கொன்றைத் தாரும், ஏதமில்
வீர வெள்ளிடைக் கொடியும், போரில்
தழங்குந் தமருகப் பறையும், முழங்கொலித் தெய்வக் கங்கை யாறும், பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும், நிரைநிரை
ஆயிரம் வருத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும், பண்ணியல்
வைதிகப் புரவியும், வான நாடும்,
மையறு கனக மேருமால் வரையுஞ்,
செய்வயல், தில்லையாகிய தொல்பெரும் பதியுமென்
றொருபதி னாயிரந் திருநெடு நாமமும்,
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்
அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்
தென்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்