பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


என்ற பாடலால் உணர்க. அன்றியும் அவ்வாசிரியர் வீழிமிழலையை மிழலை நாட்டிலுள்ள திருப்பதி என்று யாண்டும் குறிப்பிடவில்லை. ஆதலால் அவர் வீழிமிழலையும் பெருமிழலையும் வெவ்வேறு திருப்பதிகள் என்றே கருதியுள்ளாரென்பது ஒருதலை. எனவே, சுந்தரமூர்த்திகள் கூறியுள்ள மிழலைநாட்டு மிழலையும் வெண்ணி நாட்டு மிழலையும் முறையே பெருமிழலையும் வீழிமிழலையுமாயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே இவ்விரண்டும் வெவ்வேறு திருப்பதிகளேயாம். இங்ஙனமே, ஆனாய நாயனாரது மங்கலமும்[1] ஏயர்கோன் கலிக்காம நாயனாரது பெரு மங்கலமும்[2] அரிவாள் தாய நாயனாரது கணமங்கலமும்[3] பொதுவாக மங்கலமெனப் படினும் அவை வேறு வேறு திருப்பதிகளாயிருத்தல் ஈண்டு அறியத்தக்கது. இத்துணையுங் கூறிய வாற்றால், பெருமிழலைக் குறும்பநாயனாரது திருப்பதி வெண்ணி நாட்டு வீழிமிழலை யன்றென்பதும், மிழலை நாட்டுப் பெருமிழலையே யாம் என்பதும் இனிது புலப்படும்.

இனி, மிழலை நாட்டிலுள்ள பெருமிழலை எவ்விடத்துள்ளது என்பதைத் துருவி நோக்குவோம். முற்காலத்தில் சோழமண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பதும் ஒன்றாகும். ஒவ்வொரு வளநாடுப் பலநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது; எனவே, இராசேந்திர சிங்கவளநாட்டிலும் பல உள்நாடுகள் இருந்திருத்தல் வேண்டும். இவ்வளநாடு இருபத்திரண்டு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்த தென்பது கல்வெட்டு ஆராய்ச்சியால் புலப்படுகின்றது; அவற்றுள் மிழலைநாடு என்பதும் ஒன்றாகும். இதனை 'இராஜேந்திர சிங்கவளநாட்டு மிழலைநாட்டுச் சேய்நலூர் சபையார் இடக்கடவ திருமெய்க்காப்பு ஒன்றும்[4]' என்ற கல்வெட்டுப் பகுதியால் நன்குணரலாம். இக்கல்வெட்டில்





4,


  1. பெரியபுராணம், ஆனாயநாயனார் புராணம் – 7.
  2. பெரியபுராணம், ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 1
  3. பெரியபுராணம், அரிவாள்தாய நாயனார் புாரணம் – 1.
  4. South Indian Inscriptions Vol II Part III PP.331