பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


போது அது கி.பி. 1120 முதல் 1136 வரையிற் சோழ மண்டலத்திற் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்த விக்கிரமசோழன் காலத்துக் கல்வெட்டு என்பது நன்கு வெளியாயிற்று. விக்கிரம சோழனது நீண்ட மெய்க்கீர்த்தியில் 'ஐம்படைப்பருவத்து வெம்படைத்தாங்கியும்' என்பது முதலாகவுள்ள பகுதியும் காணப்பட்டது. பின்னர், அக்கல்வெட்டில் எஞ்சிய பகுதியையும் இயன்றவரையில் முயன்று படித்துக் கொண்டு வருங்கால், இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலம் என்னும் தொடர்மொழிகள் அத்திருக்கோயில் அமைந்துள்ள அவ்வூரின் பெயர் யாது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி மகிழ்வூட்டின. பிறகு, அவ்வூர் வைப்புத்தலங்களுள் ஒன்று என்பது எனது ஆராய்ச்சியிற் புலப்பட்டமையின் அதனை ஈண்டு வரையலானேன்.

சைவசமயகுரவர்களுள் ஒருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் உள்ள,

“இடைமரு தீங்கோய் இராமேச்சுரம்
       இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
       தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம்பூதூர்
       கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
       கயிலாயநாதனையே காணலாமே”

என்னும் திருப்பாடலில் ஏர் என்ற திருப்பதியொன்று கூறப்பட்டுள்ளது. அன்றியும், அவ்வடிகள் அருளிய திருவீழி மிழலைத் திருத் தாண்டகத் திலுள்ள,

“பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழிய்யார்
        பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளையுள்ளார் ஏரார்
        இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன்சொற்
கரும்பனையான் இமையோடும் கருகாவூரார்
        கருப்பறியலூரார் கரவீரத்தார்