பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

107


விருப்பமரர் இரவுபகல் பரவியேத்த
        வீழிமிழலையே மேனினாரே”

என்ற திருப்பாடலிலும் ஏர் என்னும் திருப்பதி குறிக்கப்பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். வாகீசப் பெருமானது திருவாக்கிற் பயின்றுள்ள அத்திருப்பதிக்கு அவ்வடிகள் திருவாய் மலர்ந்தருளிய தனிப்பதிகம் இது போது காணப்படவில்லை. அன்றியும், திருஞான சம்பந்த சுவாமிகளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளிய பதிகங்களும் அத்திருப் பதிக்கு இல்லை. சமயகுரவர்களாகிய இப்பெரியோர்கள் மூவரும் அருளிய தேவாரப்பதிகங்களுள் பல இறந்து போயின என்று சொல்லக் கேட்கிறோம். அங்ஙனம் இறந்துபோன பதிகங்களுள் ஏர் என்னும் திருப்பதிக்குரிய பதிகங்களும் இருத்தல் கூடும் என்பது திண்ணம். ஆயினும், திருநாவுக்கரையரது திருவீழிமிழலைத் திருப்பதிகத்திலும் க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலும் அத்திருப்பதி கூறப்பட்டிருத்தலின் அது தேவாரவைப்புத் தலங்களுள் ஒன்றாகும் என்பது ஒருதலை. எனவே, ஏர் என்னும் அவ்வைப்புத்தலம் யாண்டையது? எனின் அஃது இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடிசோழ மங்கலம் என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்று இதுபோது ஏரகரம், ஏராரம் என்ற பெயர்களுடன் கும்பகோணத்திற்கு வடபால் இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊரேயாதல் வேண்டும்.

இனி, ஏரகரம் திருக்கோயிலிற் காணப்பெறும் அக்கல்வெட்டு, அவ்வூர் இன்னம்பர் நாட்டில் உள்ளது என்பதையும், பழைய காலத்தில் ஏர் என்னும் பெயருடன் நிலவியது என்பதையும், அதற்கு மும்மடிசோழ மங்கலம் என்ற வேறொரு பெயரும் அந்நாளில் இருந்தது என்பதயுைம் நன்கு புலப்படுத்து கின்றது. இவ்வின்னம்பர் நாடு பண்டைக்காலத்திற் சோழ மண்டலத்திற் காவேரிக்கு வடகரையிலிருந்த பலநாடுகளுள் ஒன்றாகும்; இஃது இன்னம்பரைத் தலைநகராகக் கொண்டது. கும்பகோணந் தாலூகாவில் உள்ள கொட்டையூர், மேலக் காவேரி, கருப்பூர், அகூகூர், ஏரகரம் முதலான ஊர்களையும் பாவநாசந் தாலூகாவில் உள்ள ஆதனூர், மருத்துவக்குடி முதலான ஊர்களையும் தன்னகத்துக்கொண்டு இவ்வின்னம்பர் நாடு முற்காலத்தில்