பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
கருத்தெனப் பண்பினோர் உரைத்தவை நாடின் அவ்வகைக் கவைதாஞ் செவ்விய வன்றி
அரியவை யாகிய பொருண்மை நோக்கிக்
கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையாற்
கருத்தினி தியற்றி யோனே பரித்தேர்
வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்
கெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூ ருள்ளும்
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொன்மை சான்ற நன்மை யோனே.

என்னும். பாடலால் அறியப்படுகிறது. அன்றியும், இப்பாடலின் கீழ் ஓர் உரைநடைப் பகுதியும் உளது. அஃது ‘இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான் இடையளநாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்‘ என்பது. இவற்றால் நெடுந்தொகை நானூற்றுக்குக் கருத்து அகவலாற் பாடியவர் சோழமண்டலத்தில் இடையளநாட்டிலே யுள்ள மணக்குடி யென்ற ஊரில் வாழ்ந்தவர் என்பதும், இவரது இயற்பெயர் பால்வண்ணதேவன் என்பதும், அரசனால் அளிக்கப்பெற்ற வில்லவதரையன் என்ற பட்டமுடையவர் இப்புலவர் என்பதும் நன்கு வெளியாகின்றன. இவர் அகநானூற்றிலுள்ள ஒவ்வொரு பாடலின் கருத்தையும் தெள்ளிதின் விளக்கிச் சிறந்த அகவல் நடையில் கூறியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அகநானூற்றுப் பாடல்களின் கருத்தை விளக்கினமை ஒன்றே இவ்வாசிரியர் புலத்துறை முற்றிய புலவர் பெருமான் என்பதை இனிது புலப்படுத்து கின்றது. இத்தகைய தமிழ்ப் பேராசிரியர் அரிதின் எழுதித் தமிழகத்திற்கு உதவிய அந்நூல் இந்நாளில் கிடைக்காமற் போனமை பெரிதும் வருந்தத்தக்கது.

இனி, இவ்வாசிரியர் பிறந்து வாழ்ந்துவந்த ஊர் யாது என்பது ஈண்டு ஆராயற்பாலதாகும். சோழமண்டலத்தில்