பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


கடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காணலாமே'

என்னுந் திருப்பாட்டில் இடைமருதும் இடவையும் வெவ்வேறு திருப்பதிகளாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். அவற்றுள், இடைமருதிற்குச் சமயகுரவர் மூவரும் பாடியருளிய திருப் பதிகங்கள் இப்போதுள்ளமையால் அது பாடல் பெற்ற தலமாகும்; இடவைக்குத் தனிப்பதிகம் இல்லாமையாலும் க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் அவ்வூர் கூறப்பட்டிருத்தலாலும் அது வைப்புத்தலங்களுள் ஒன்றாகும். எனவே, அப்பரடிகள் திருவாக்கினால் இடைமருதும் இடவையும் வெவ்வேறு ஊர்கள் என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க.

இனி, திண்டுக்கல் தாலுக்காவிலுள்ள இராமநாதபுரத்தில் வரையப் பெற்ற கல்வெட்டொன்று,[1] மாறஞ்சடையன் என்னும் பாண்டியன் ஒருவன் சோழ மண்டலத்திலுள்ள இடவை என்ற ஊரின் மேல் படையெடுத்துச் சென்றான் என்று கூறுகின்றது. ஆகவே, இடவை என்பது சோழநாட்டிலுள்ளதோர் ஊர் என்பது தெள்ளிது. அவ்வூர், சோழமண்டலத்தில் இராசேந்திர சிங்கவளநாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய மண்ணிநாட்டில் முற்காலத்தில் இருந்துளது என்பது தஞ்சைப் பெரியகோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அதனை,

'இராசேந்திர சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மகாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு வேம்பற்றூராகிய அவனிநாராயணச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார்[2] இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும் இந்நாட்டு இடவை சபையார் இடக்கடவத் திருமெய்காப்பு ஒன்றும்’ எனவும்.

'இராசேந்திர சிங்க வளநாட்டு மண்ணிநாட்டு இடவை[3] யிலிருக்கும் இடையன் கூத்தன் தேவனும் ஆடவல்லானால்


  1. Inscripti No. 690 of 1950
  2. S.I.I. Vol. II. Page 331.
  3. Ibid. p. 466