பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பெருந்தனம் பெற்று, அவனுக்குக் கொடுத்து, பின்னரும் அப்படியே மற்றைய ஐந்துபுத்திரிகளையும் அயலார்க்கே மணஞ்செய்விக்க, இதனையுணர்ந்த ஏழாவது குமாரத்தி தனது தந்தையாரது வஞ்சகச் செயலைக் கண்டு, பொறாது, மனம் வருந்தி, பெற்றோர்கட்குத் தெரியாமல் அவனுடன் புறப்பட்டு வெளியே செல்லும்போது, வழியில் ஓரிரவில் திருமருகல் திருக்கோயிற்குப் புறத்தில் ஒருமடத்தின் கண் நித்திரை செய்யுங்கால் அவ்வணிகன் அரவத்தினால் தீண்டப்பட்டிறக்க, அதனைக் கண்ட அக்கன்னியானவள் அவனைச் சர்பந்தீண்டியுந் தான் தீண்டாளாய் அவனருகே வீழ்ந்து கதறிவருந்த அக்காலத்து அவண் எழுந்தருளிய ஆளுடையபிள்ளையார் நிகழ்ந்ததையறிந்து, அவள் துயரொழிப்பத் திருமருகற் பெருமானைச் சிந்தித்துச் “சடையாயெனுமால்” என்னும் அருட்பதிகமோதி அவ்வணி கனை யுயிர்பெற்றெழச் செய்ததுடன், அவ்விருவரையும் மணம்புணரச் செய்து, அவர்கட்கு விடை கொடுத்தனுப்பின ரென்பதேயாம்.

இனி, திருவிளையாடற் புராணத்திற் கூறப்படும் சரித்திர மாவது:- கடற்புறத்துள்ள ஒருபட்டினத்திற் செல்வ மிகுந்த ஒருவணிகன் தான் தவங்கிடந்து பெற்ற ஒரே புதல்வியை மதுரையம்பதியில் முதன் மணமுடித்து வாழ்ந்து கொண்டிருந்த தனது மருகற்கு மணஞ்செய் விக்கும்படி சுற்றத்தாருக்கு அறிவித்து, ஊழ்வினை வலியால் மனைவியுந் தானும் உயிர்துறக்க, அதனை யறிந்தமருகன், மிக்க துயரத்துடன் அப்பட்டினத்தையடைந்து, மாமன்மனையிற் சின்னாளிருந்து, தனது மாமன்புதல்வியை மதுரைக்குக் கொண்டுபோய், ஆங்கு உறவினர் முன்னிலையில் மணந்து கொள்வோமென்று, அக்கன்னியையும் அழைத்துக் கொண்டு, அவ்விடத்து விடைபெற்று, மதுரையைநோக்கிச் செல்லுங்கால், வழியில் ஓரிரவில் திருப்புறம்பயம் என்னும் மூதூரின்கண் தங்கி, ஆண்டுச் சிவபெருமான் திருக்கோயிற்கருகில் வன்னிமரத்தடியிற் போனகமமைத்துண்டு, கோயில் வாயிற்படியின் மீது தலைவைத்துறங்கும் போது அவ்வணிகன் ஓரரவால் தீண்டப் பட்டிறக்க, அதனையுணர்ந்த அவ்வணிக மாதும் மற்றையோரும் பக்கத்திருந்து வருந்தியலறுகையில்,