பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

135


சங்ககாலத்திற்குப்) பன்னூற் றாண்டுகட்குப் பின்னிருந்த திருஞானசம்பந்தசுவாமிகள் இச்சரித்திரத்திற் சொல்லப்படும் வணிகருக்கு ஆருயிரளித் தருளினார் என்று திருவிளையாடற் புராணத்துச் சொல்லப் பட்டிருப்பது சிறிதும் பொருந்தவில்லை யென்க.[1]

அன்றியும் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளிய திருப்புறம்பயத்தேவாரப் பதிகத்திற் காணப்படும் "விழுங்குயிரு மிழ்ந்தனை" என்னும் வாக்கியத்தினால் அரவாலிறந்த வணிகனுக்கும் புறம்பயத்துறை இறைவன் இன்னுயிரீந் தருளினா ரென்பது சுவாமி கட்கும் உடன்பாடாதலுணர்க. இனி, மிகப் பழைய காலத்தில், புறம்பயத் துறை சிவபெருமான் சனகாதி நால்வர்க்கு அறம்பயனுரைத்தருளிய விஷயத்தை "நால்வர்க் கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்"

மறம்பயமலைந்துவர்மதிற்பரிசுறுத்தனை
நிறம்பசுமைசெம்மையொடிசைந்துன துநீர்மைத்
திறம்பயனுறும்பொருள் தெரிந்து ணருநால்வர்க்
கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்.

திருஞானசம்பந்தர் - திருப்புறம்பயப்பதிகம் - 1வது பாசுரம்.

ஈண்டு “புறம்பயமதனிலறம்பலவருளியும்" என்னும் ஸ்ரீமத் - மாணிக்க வாசகசுவாமிகள் அருமைத் திருவாக்கை நோக்குக. என்று முதலாவது பாசுரத்தில் சுவாமிகள் இறந்தகாலத்திற் கூறியருளியது போல், மூன்றாவது பாசுரத்திலும் "விழுங்கு யிருமிழ்ந்தனை”[2] என்று இறந்தகாலத்திற் கூறியிருத்தலே, புறம்பயத்துறையிறைவன் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிரீந் தருளியது சுவாமிகள் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகட்கு முன்னரே யென்பதற்குத் தக்க சான்றாகும். இதுகாறுங் கூறியவாற்றால், திருப்புறம் பயபுராணத்திற் சொல்லப்பட்டிருப்பதே வன்மையுடைத் தாதலறிக.


  1. பழையதிருவிளையாடலியற்றியருளிய நம்பியார் கூற்றும் பொருந்தவில்லை யென்பது ஈண்டுக் கவனிக்கத்தக்கது.
  2. விரிந்தனைகுவிந்தனை விழுங்குயிருமிழ்ந்தனை
    திரிந்தனை குருந்தொசி பெருந்தகையுநீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகுமயானம்
    புரிந்தனைமகிழ்ந்தனை புறம்பயமமர்ந்தோய்.

    திருஞானசம்பந்தர் - திருப்புறம்பயப்பதிகம் - 3வது பாசுரம்.