பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


மென்க. இவர்களுள், பேராசிரியரும் அடியார்க்குநல்லாரும் நச்சினார்க்கினி யருக்கு முந்தியவர் களென்பது சரித்திர வாராய்ச்சி செய்யும் அறிஞர் பலரும் அறிந்தவிஷயம். நச்சினார்க் கினியரும் பரிமேலழகரும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாதலின், நம்மாசிரியரும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் விளங்கிய வராதல் வேண்டும்.

இனிக் “கல்லாடத்துக்கலந்தினிதருளி” யென்னுந் திருவாசகச் செய்யுளடியால், கல்லாடமென்னுந்திருப்பதி யொன்றுள தென்று தெரிகிறது. கடைச்சங்கப்புலவராய கல்லாடனாரும் கல்லாடமியற்றிய விரண்டாங்கல்லாடனாரும் அத்திருப்பதியிற் றோன்றிய வர்களாயிருத்தலும் கூடும். கல்லாடமுடையார் குமாரதெய்வத்தை வழிபடுகடவுளாகக் கொண்டவரென்பதும், மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்திடத்து மிக்க அன்புடைய வரென்பதும், இந்நூலாராய்வார்க்கு இனிது புலனாம்.

இனி, இக்கல்லாடமியற்றப் பெற்றகாலத்திற்குப் பன்னூறாண்டு கட்குப் பின்னர் விளங்கிய ஒரு புலவர் இந்நூலில் சொற்செறிவும் பொருளாழமுங் கண்டு வியந்து, இதனை யியற்றியவர் கடைச்சங்கப் புலவராய கல்லாடனாரே யென்றெண்ணி, முற்குறித்துள்ள சிறப்புப்பாயிரச் செய்யுட் களையின்றி, இந்நூலோடு சேர்த்தெழுதிவைத் தனராதல் வேண்டும். இதனால், கல்லாடனார் இருவரிருந்தன ரென்னும் உண்மை தெரியாத காலத்து, இந்நூற்குச் சிறப்புப்பாயிரச் செய்யுட் களியற்றப் பெற்றன வென்பது நன்கு வெளியாகிறது.

இதுகாறுங்கூறியவற்றால், கல்லாடரென்னும் பெயர் பூண்ட புலவர்கள் இருவரிருந்துள்ளார்களென்பதும், அவர்களுள் இரண்டாம் கல்லாடனாரே 'கல்லாட' மென்ற நூலியற்றியவ ரென்பதும், இவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்தவரென்பதும் பிறவும் நன்கு விளங்கி நிற்றல் காண்க.