பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

165


பாண்டிய நாட்டைக் களப்பிரரும் தொண்டைநாடு சோழநாடுகளைப் பல்லவரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றிக் கொண்டு அவற்றை அரசாண்ட செய்திகள் வரலாற்றாராய்ச்சியால் அறியக் கிடக்கின்றன. அவர்கள் வேறு மொழிகளைப் பேசுவோராதலின் தம் ஆட்சியில் தமிழ் மொழியை அரசாங்க மொழியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அன்னோர் ஆளுகையில் தமிழ்மொழி தாழ்ந்த நிலையை எய்திப் போற்றுவாரற்றுப் புறக்கணிக்கப்பட்டது. அக்காலத்தேதான் இசைத்தமிழ் நூல்களின் பயிற்சியும் ஒழிந்தது. கற்போர் இல்லாமையால் அவ்வரிய நூல்களும் அழிந்தன. எனவே, தமிழிசையும் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடைந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரையில் அத்தகைய நிலையில் நம் தமிழகம் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியன் கடுங்கோன் என்பான் களப்பிரரைப் போரில் வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்றினான். அக்கால முதல் அந்நாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. அவர்கள் ஆளுகையில் தமிழ்மொழி அரசாங்க மொழியாகிச் சீரும் சிறப்பும் எய்தியது. அந்நாட்களில் பாண்டி வேந்தர்கள் தம் தலைநகராகிய மதுரையம்பதியில் இசைத்தமிழ்ச் சங்கம் ஒன்று தனியாக அமைத்துத் தமிழிசையை வளர்த்து வந்தனர் என்று தெரிகிறது. அச்செய்தியை, ‘உயர் மதிற்கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்தெய்தியதே’[1] என்னும் மணிவாசகப் பெருமான் திருவாக்கினாலும், ‘ஆழி வடிம் பலம்ப நின்றானும் அன்றொருகால் - ஏழிசை நூற்சங்கத் திருந்தானும்[2] என்னும் நளவெண்பாப் பாடலாலும் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். அவற்றில் கூறப்பட்டுள்ள ‘ஏழிசைச் சூழல்', ‘ஏழிசைச்சங்கம்' ஆகிய இரண்டும் மதுரைமாநகரில் அக்காலத்தில் நிலவிய தமிழிசைச் சங்கத்தைக் குறித்தல் அறியத்தக்கது.


  1. திருக்கோவையார், பா. 20.
  2. நளவெண்பா, சுயம்வர கா, பா. 137. இவ் வெண்பாவின் உண்மைப் பொருளைச் செந்தமிழ் ஏழாந் தொகுதியிற் காணலாம்.