பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பயிற்சியும் இல்லாதவர்களாகப் போய் விட்டனர். அவர்கட்குப் பண்டைத் தமிழ்நூல்களைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காமற் போயினமையால் அன்னோர் பண்டைத் தமிழரின் பண்பாடு, நாகரிகம், வீரம் முதலானவற்றை அறியாதவர்களாகவே யிருந்து கொண்டு நம் தமிழகத்தில் தம் வாழ்க்கையை நடத்தி விட்டனர். இக்குறைபாடு, தம் தாய்மொழி இலக்கியங்களைப் படிக்காமல் அந்நிய மொழி நூல்களை மாத்திரம் கற்று அவற்றில் ஈடுபாடுடையவர்களாயிருந்தமையால் உண்டாயிற்று என்பது தேற்றம். இவ்வுண்மையை,

‘ஆங்கிலம் ஒன்றையே கற்றார் அதற்கு
         ஆக்கையோ டாவியும் விற்றார்
தாங்களும் அந்நிய ரானார் செல்வத்
         தமிழின் தொடர்பற்றுப் போனார்‘

என்று ஓர் அறிஞர் கூறி வருந்தியிருத்தலாலும் நன்கறிந்து கொள்ளலாம்.

இதனையுணர்ந்த பெரியோர் சிலர் இத்தகைய நிலைமை இனி ஏற்படாதவாறு தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஆதரவும் தேட முற்பட்டனர். அவர்களது அரிய முயற்சியினால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று கூறலாம். இண்டர்மீடியேட், பீ.ஏ. வகுப்புக்களுக்குத் தமிழ்ப் பாடங்கள் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அன்றியும், தமிழ் வித்வான் தேர்வும் ஏற்படுத்தப் பட்டது. அத்தேர்விற்குப் பயிற்சியளிக்கும் பொருட்டுத் தமிழ்க் கல்லூரிகளும் சில இடங்களில் அமைக்கப் பெற்றன. அவற்றுள் மயிலத்தில் நிறுவப்பெற்றுள்ள ஸ்ரீ சிவஞான பாலய தேசிக சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி, யாவரும் பாராட்டற்குரிய பெருமையுடையதாகும் இக்கல்லூரியை மயிலத்தில் அமைத்துச் சிறப்பாக நடத்திவருபவர்கள் பொம்மபுரம் ஆதீனத் தலைவர்களாக வுள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிக சுவாமிகளவர்களேயாவர். இவர்கள் தம் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்ப் புலமையோடு நல்லொழுக்கமும் தெய்வ பக்தியும் அமையுமாறு தக்க பயிற்சியளித்து வருவது எல்லோரும் போற்றுதற்குரிய அருஞ்செயலாகும். இவர்களுடைய செயற்கரிய செயல்கள், முன்னர்