பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


யிட்டவர்; அன்றியும், தம்மை அடுத்த மாணவர்கட்குக் கைம்மாறு கருதாமல் தமிழ் இலக்கண இலக்கியங் களையும் தருக்க நூல்களையும் வேதாந்த நூல்களையும் முறையாகப் பாடஞ்சொல்லி வந்தவர். அப்பெரியாரது பெயர் குப்புசாமிராசு என்பது; பின்னர் அவ்வறிஞர் பிரமானந்த சுவாமிகள் என்று வழங்கப் பெற்று வந்தனர்.

மற்றவர் நடுத்தர வயதினர்; சிறந்த தமிழ்ப் புலமையுடையவர்; அக்காலத்தில் சென்னையிலிருந்த ஓர் ஆங்கிலக் கலாசாலையில் தமிழாசிரியராயிருந்து புகழுடன் விளங்கியவர்.

மூன்றாமவர் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர்; மேலே குறிப்பிட்ட பிரமாநந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களும் தருக்க நூலும் முறையாகப் பயின்று புலமை எய்தியவர்; கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கி.பி. 1899 முதல் 1932 வரையில் தமிழாசிரியராயிருந்து பாடஞ்சொல்லும் வகையில் மாணவர்கள் உளத்தைப் பிணித்து அவர்களது அன்பிற்கு உரியவராய்ப் புகழுடன் நிலவியவர். அவ்வறிஞரது பெயர் அ.பாலசுப்பிரமணிய பிள்ளை என்பது.

வடவாற்றின் தென்கரை வழியாக மேற்கே சென்ற அறிஞர் மூவரும் வம்புலாஞ் சோலைவரையிற் சென்று அங்குச் சிறிதுநேரம் தங்கி உரையாடிய பின்னர் அவ்வழியே திரும்பினார்கள். அவ்வாறு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தஞ்சைப் பெரியார், சென்னை ஆசிரியரையும் தம் மாணவரகிய பிள்ளை அவர்களையும் பார்த்து 'நாம் மூவரும் இவ்வாற்றங்கரை வழியே போய்க்கொண்டிருக்கிறோம். நமது செயல் இவ்வாறு உள்ளது. ஆனால் உள்ளம் ஏதேனும் ஒன்றை எண்ணிக் கொண்டுதானே இருக்கும். உங்கள் மனம் இப்போது எதனைப் பற்றிக் கொண்டிருக் கிறது?' என்று பொதுவாகக் கேட்டனர்.

பிள்ளை அவர்கள் :- நாளைக்கு எனக்குப் பள்ளிக்கூடம் உண்டு. ஆதலால் தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்குக் காலை 9 மணிக்குப் புறப்படும் புகைவண்டியில் தவறாமல் செல்ல வேண்டும். அதன்பொருட்டுப் பொழுது விடிவதற்கு இரண்டு மூன்று நாழிகைக்கு முன்னரே வலம்புரியிலுள்ள என் வீட்டை