பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


32. இரு பெரும் புலவர்கள்

நம் தமிழ்நாட்டில் அரசு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தமிழ் வேந்தர்களின் ஆட்சி கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீழ்ச்சியுற்றமை அறிஞர் பலரும் அறிந்ததேயாம். அதன் பின்னர் நம் தமிழகம், பிறமொழி யாளர்களாகிய ஏதிலாரது ஆட்சிக்குள்ளாகி எல்லையற்ற துன்பங்களை நாளும் அனுபவித்து வந்தமையோடு தன் பெருமை குன்றித் தாழ்ந்த நிலையையும் எய்தியது. அன்னியர் ஆட்சி நடைபெற்ற காலங்களில் நம் தாய்மொழியாகிய தமிழ் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அக்காலங்களில் அவ்வயலாருடைய மொழிகளே அரசியல் மொழிகளாக அமைந்து பெருமை யுற்றன. எனவே, தமிழ்மொழி ஆதரவற்ற நிலையை அடைந்தது. அதனைப் போற்றுவோரும், கற்பாரும், கற்பிப்பாரும் மிகக்குறைந்து போயினர். அக்கொடிய காலங்களில் ஊர்தோறும் இளம்பிள்ளைகளுக்கு எழுத்தறி வித்துக் கல்விகற்பித்து வந்தவர்கள் பாலாசிரியன்மாரே எனலாம். அவர்களுள் ஒரு பகுதியினர் வீரசைவப் பெருமக்கள் ஆவர். அவர்கள் தமிழ்ப்புலமையும் கடவுட் கொள்கையும் சீலமும் உடையவர்களாகத் திகழ்ந்தமையால், பேரூர்களிலும் சிற்றூர்களிலும் செல்வர்களாலும் பொது மக்களாலும் பெரிதும் மதிக்கப்பெற்று வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்மொழியோடு மக்களது வாழ்க்கைக்கு இன்றியமையாத கணக்கு முதலியவற்றையும் இளஞ்சிறார்க்குக் கற்பித்து வந்தனர். ஆகவே, இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு அடிகோலியவர்கள் அவ்வாசிரியர்களே என்று கூறலாம். உவாத்திமைத் தொழிலில் நல்ல ஊதியம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத அக்காலத்தில் பாலாசிரியர்கள், தாம் பெற்றது கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தமையோடு தமிழ்த்தொண்டினை இயன்றவரையில் புரிந்தும் வந்தனர்.