பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

181


இத்துணைச் சிறப்பு வாய்ந்த அப்பேரூரில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரசைவ மரபில் தோன்றிய நல்லாசிரியர் ஒருவர் இருந்தனர். அப்புலவர்பிரான் கந்தப்பையர் என்னும் பெயரினர்; சிவஞான முனிவரின் முதல் மாணவரும், கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புப் பெயருடையவரும், தணிகைப்புராணத்தின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் பால் இலக்கண இலக்கியங்களைப் பயின்று சிறந்த புலமை படைத்தவர்; தணிகை அந்தாதி, தணிகைக்கலம்பகம், தணிகை உலா, தணிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இயற்றிப் புகழ் எய்தியவர். அவர் தம் மனைவியாருடன் இல்வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த காலத்தில், மகப் பேறின்மையால் மனம் வருந்தி அவ்வம்மையாரின் தங்கையையும் மணந்துகொண்டார். மனைவியர் இருவருக்குமே பிள்ளை இல்லை. புலமைவாய்ந்த குடும்பத்தினரைப் புதல்வனில்லாக்குறை பெரிதும் வருத்தியது. எனினும், தமக்கையும் தங்கையுமாகிய இருவரும் தம் நாயகன் மனம் உவக்கும்படி தம்முள் ஒற்றுமை யுடையவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.[1] ஒருநாள் இருவரும் தண்ணீர் முகந்துவரும் பொருட்டுத் திருத்தணிகையிலுள்ள ஓர் ஊருணிக்குச் சென்றனர். அப்போது வடக்கேயுள்ள திருவேங்கட மலை அவ்விருவர்க்கும் கட்புலனாயிற்று. அச்சமயத்தில் தங்கைக்கும் தமக்கைக்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தது.

தங்கை :- அக்கா, நாம் நாள்தோறும் வழிபட்டுவரும் தணிகாசலப் பெருமான் மக்கட்பேறு அடையுமாறு அருள் புரிந்தாரில்லை; இப்போது நம் கண்களுக்கு எதிரே தோன்றும் திருவேங்கட மலையிலுள்ள பெருமாளாவது நமக்கு அப்பேற்றை அளித்தருளினால் குழந்தைக்கு அவருடைய திருப்பெயரையே வைத்து வழங்கலாம்.

தமக்கை :- அருடைய திருவருளால் மகப்பேறுண்டாயின் அப்படியே செய்வோம்; யானும் அங்ஙனமே வேண்டுகின்றேன்.

தங்கை :- அக்கா, நாம் மறந்தும் பிறதெய்வம் தொழாத வீரசைவ மரபினர். இந்நிலையில் திருவேங்கடப் பெருமான்


  1. பின்வரும் மகப்பேறு பற்றிய வரலாறு செவிவழிச் செய்தி கொண்டு எழுதப்பட்டது.